திருமலை: நம் வருங்கால தலைமுறையினர் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத் மாதப்பூரில் நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் 3.30 ஏக்கர் நிலம் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபத்தை நேற்று முன்தினம் இடித்து அகற்றினர்.
இந்நிலையில், ஐதராபாத் கோகாபேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று பேசியதாவது: கிருஷ்ணா, கோதாவரி ஆற்றில் கடந்த காலங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நேரத்தில் ஐதராபாத் நகருக்கு குடிநீர் வழங்கியது உஸ்மான் சாகர் மற்றும் ஹிமாய்த் சாகர் ஏரிகள். ஆனால் அரசியல்வாதிகள், செல்வாக்கு உள்ளவர்கள், எனது நண்பர்கள் என பலர் இந்த ஏரியை சுற்றி பண்ணை வீடுகளை கட்டி அதன் கழிவுநீரை ஏரிகளில் விட்டுள்ளனர். ஏரி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதியாக பல தவறுகளை தெரியாமல் செய்கிறோம். ஆனால் தெரிந்து நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக பரிகாரமாக இந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வருங்கால தலைமுறைக்கு நாம் இதனை செய்ய வேண்டும். இதற்காக யாருடைய தலையீடும் இல்லாத வகையில் ‘ஹைட்ரோ’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இயற்கையை நாம் காப்பாற்றாவிட்டால் அது அளிக்கும் தண்டனையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. இயற்கையை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஐதராபாத் நகரை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள ஏரி, நீர்பிடிப்பு பகுதிகளை மீட்பதில் உறுதியாக உள்ளேன். நம் வருங்கால தலைமுறையினர் நலம் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. ஏரி, நீர்பிடிப்பு பகுதியை பாதுகாக்க முடியாவிட்டால் மக்கள் பிரதிநிதியாக நான் தோல்வியடைந்து விட்டதாக கருதுவேன். எனது இந்த முயற்சிகளை விமர்சிக்காமல், எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். என் மீது எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பின்வாங்க போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
The post நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்க மாட்டேன்: தெலங்கானா முதல்வர் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.