இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நீர்வரத்து 6,000 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 14,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள மெயினருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று காலை முதல் காவிரியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 6,498 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 5 மணி நிலவரப்படி, 7563 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 10,514 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியில் இருந்து 250 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 54.55 அடியாகவும், இன்று காலை 55.82 அடியாகவும் உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 21.67 டிஎம்சியாக உள்ளது.
The post நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை appeared first on Dinakaran.