நீர்வளத்துறை இன்று முக்கிய முடிவு கீழ்பவானி நீர் நிர்வாகத்தில் மாற்றம் விரும்பும் விவசாயிகள்

*கடைமடைக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வலுக்கும் கோரிக்கை

ஈரோடு : கீழ்பவானி நீர் நிர்வாகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், கடைமடைக்கு தடையின்றி தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்திய நிலையில் இது தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்த 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தாண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட சில நாட்களில் பெருந்துறை அருகே வாய்க்காலில் நீர்கசிவு ஏற்பட்டதையடுத்து தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டு கசிவு சரி செய்யப்பட்டதும் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறக்கப்பட்டு 50 நாட்களை கடந்த பின்னரும் கடைமடை பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் செல்லாமல் உள்ளதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். இதனால் சாகுபடி பரப்பளவு இந்தாண்டு வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் பாசன பகுதிகளில் நடவு பணிகள் தீவிரமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு அதுபோன்ற சூழல் ஏதும் இல்லாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதே சாகுபடி பரப்பளவு குறைவுக்கு காரணம் என்று பாசன விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அணையில் இருந்து முழு கொள்ளளவான 2,300 கன அடி தண்ணீர் வாய்க்காலில் திறந்துவிட்டபோதிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் என்ன? என தெரியாத நிலை இருந்து வருகிறது. இரவு நேரங்களில் தண்ணீர் திருட்டை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததன் மர்மம் என்ன? என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.

விவசாயிகளின் இந்த புகார்களுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உரிய ஆதாரங்களோடு மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும் தற்போதை நீர்நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க நீர்வளத்துறையினர் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி கூறியதாவது:

கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது நடவு பணிகள் நடப்பதால் முறை வைத்து தண்ணீர் விநியோகம் செய்யக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தியதையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.

தண்ணீர் திருட்டை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டு 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாய்க்கால் சீமைப்பு பணிகள் நடைபெற்ற 50வது மைல் வரை நீர் கசிவு என்பதே கிடையாது. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண நீர் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து இன்று (8ம் தேதி) முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

The post நீர்வளத்துறை இன்று முக்கிய முடிவு கீழ்பவானி நீர் நிர்வாகத்தில் மாற்றம் விரும்பும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: