×

விருதுநகர் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு குழந்தைகளை கொல்ல முயன்ற பெண்கள் கைது: 3 பெண் காவலர்கள் காயம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகளை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்த 3 பெண் போலீசார் காயம் அடைந்தனர். விருதுநகர் பள்ளப்பட்டி வாடிவாசலை சேர்ந்தவர் மீனா (40). இவர் பொதுப்பாதையை தனியாருக்கு பட்டா கொடுத்திருப்பதால் வீட்டிற்கு செல்ல வழியில்லை என கூறி, நேற்று குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க மனு அளித்திருந்தார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அலுவலகம் முன் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது திடீரென மீனா , உடன் வந்த கற்பகம் (67), விஜயலட்சுமி (45), சாரதா (42), சூர்யாதேவி (31), சரஸ்வதி (33) ஆகிய 6 பேரும் சேர்ந்து உடன் வந்த 8 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதை தடுக்க முயன்ற பெண் காவலர்கள் பிரமிளா, சத்யா, ஈஸ்வரி ஆகிய 3 பேரையும் தாக்கி பிராண்டிவிட்டு, தாங்கள் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். இதையடுத்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து 6 பெண்களையும் கைது செய்தனர். உடன் வந்த 8 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்

* அதிமுக பஞ். தலைவர் மீது தீண்டாமை கொடுமை புகார
விருதுநகர் மாவட்டம், ஆவியூர் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் சமூக மக்கள் நேற்று விருதுநகர் கலெக்டர் ஆபீசில் அளித்த மனுவில், ‘‘ஆவியூர் தெற்கு தெருவில் நாங்கள் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த ஜூன் 10ல் நாங்கள் நடத்திய பொங்கல் விழாவில் மாற்று சமூக மக்கள் இடையூறு செய்தனர். ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த 17ம் தேதி ஊர் கூட்டம் போட்டு எங்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். அதிமுகவை சேர்ந்த ஆவியூர் ஊராட்சி தலைவரும் ஊர் கூட்டம் போட ஏற்பாடு செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி முதல் ஆவியூர் கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கு டீ கடை, ஓட்டல், மளிகை, பால், குடிநீர் உள்பட எவ்வித அத்தியாவசிய பொருட்களும் வழங்கக் கூடாது என தடை போட்டுள்ளனர். நூறு நாள்வேலை வழங்க மாட்டோம், ஊராட்சி அலுவலகத்தில் தூய்மை பணி செய்யவிடமாட்டோம் என ஊராட்சி தலைவர் தனலட்சுமியின் கணவர் ரவி கூறுகிறார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

The post விருதுநகர் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு குழந்தைகளை கொல்ல முயன்ற பெண்கள் கைது: 3 பெண் காவலர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,collector ,Dinakaran ,
× RELATED பட்டாசு ஆலை விபத்தில் சேதமடைந்த...