கன்னியாராசியினர் எப்படி?

நட்பு ஒரு வரம்

கன்னியா ராசியின் அதிபதி புதன் ஆவார். கன்னியா ராசி, மண் ராசியாகும். மிதுனமும், கன்னியும் புதன்ராசி என்றாலும்கூட, மிதுன ராசிக்காரர்கள் வாய்விட்டுப்பேசுவார்கள்.ஆனால் கன்னியா ராசிக்காரர்கள், சில சொற்களை மட்டும் சொல்லி கூட்டத்தை மகிழ்விப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள், தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவார்கள்.கன்னியா ராசிக்காரர்கள், அவ்வாறு வெளிச்சத்துக்கு வர விரும்புவதில்லை. சிலர் மேடை ஏறி நிகழ்ச்சி நடத்தும் பாடகராக, நாட்டியக்காரர்களாக இருந்தாலும்கூட, நிகழ்ச்சி முடிந்ததும் திரைக்குப் பின்னே போய்விடுவார்களே தவிர, ரசிகர்கள் மத்தியில் வந்து நின்று அவர்களின் ஆரவாரத்தை ரசிப்பதில்லை. கன்னிராசியின் தெய்வம் பெருமாள். புதன் ராசியின் அதிர்ஷ்ட கல் மரகதம். புரட்டாசி மாதம் பிறந்தவர்கள், கன்னியா லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றும் புதன் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், இந்த பலன் அதிகளவு பொருந்தும்.

நிதானமானோர்

புதன்ராசி என்பது புத்திகாரகனாகிய ராசி என்பதால், இவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படாமல் நின்று நிதானமாக சிந்தித்து செயல்படும் ஆற்றல் மிக்கவர்கள். தன்னடக்கத்தோடு நடந்துகொள்வார்கள். சம்பளம் இல்லாமல், சமூகத்துக்கு ஊழியம் செய்வோர் கிடையாது. அதே வேளையில், பிறரை ஏமாற்றவும் மாட்டார்கள். தங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைக் கருத்தில்கொண்டுதான் எந்த ஒரு வேலையையும் செய்வார்கள். ஊருக்கு உழைப்பவர்கள் அல்ல.

ஆலோசனைத் திலகம்

கன்னியா ராசியினருக்கு, நண்பர்கள் கூட்டம் அதிகம். எல்லா தரப்பினரோடும் நட்பாகவும், அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கியும், சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக விளங்குவர். மிக வேகமாகச்சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். வழக்குகளில் கெட்டிக்காரர்கள். எந்த பிரச்னைக்கும் உடனடி தீர்வு சொல்வதில் சமர்த்தர். எதையும் மனதில் ஆறப்போட்டு, ஊறப் போட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகி கவலைக்குள்ளாகி துன்பப்படுவதில்லை. `கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற பழமொழிக்கேற்ப கிடைக்காத பொருளுக்கு இவர்கள் ஏங்குவதில்லை. உடனடியாக அதை மறந்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவர்.

கல்வித்தாகம்

கன்னி ராசிக்காரர், எல்லா விஷயங்களையும் கற்றுத் தேறவேண்டும் என் விரும்புவர்.தொழிநுட்பம், அறிவியல், மருத்துவம் என்று பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடைய இவர்கள், பலர் மத்தியில் தனக்குத் தெரியாத விஷயங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அமைதியாக இருப்பார்கள். தனக்குத் தெரியாது என்று எவரிடமும் சொல்வது கிடையாது. தெரியும் வரை அமைதியாக இருந்து தெரிந்த பிறகு தங்களுக்குத் தெரிந்ததை பிறரிடம் பகிர்ந்து கொள்வர். பிறர் மத்தியில் பேசி தன்னுடைய அறிவை உறுதிசெய்து கொள்வர்.

ரகசியம் பரம ரகசியம்

கன்னியா ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை, படிப்பில் ஆர்வமின்மை, தொழிலில் ஈடுபாடின்மை போன்றவை குறித்து நுணுகி நுணுகி கேள்வி கேட்பது இவர்களுக்கு பிடிக்காது. மேஷம் போன்ற சில ராசிக்காரர் தங்கள் மனக் கவலைகளை வெளிப்படையாக ஒருவரிடமோ பலரிடமோ சொல்ல விரும்புவார்கள். ஆனால், புதன் ராசிக்காரர் குறிப்பாக, கன்னியா ராசிக்காரர்கள் யாரிடமும் தங்கள் வேதனைகளை எடுத்துச் சொல்வதில்லை. தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அதற்கான தீர்வைத்தேடிக்கொள்வார்கள்.

கலாரசிகர்

சினிமா, நாடகம், கச்சேரி, நடனம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில், கன்னியா ராசிக்காரர்களை பார்க்கலாம். அமைதியாக ஓரிடத்திலிருந்து ரசிப்பார்களே தவிர, கைதட்டி ஆரவாரம் செய்து விசில் அடித்து கத்தி கூச்சல் போடுவதில்லை. முதல் நாள் முதல் காட்சி பார்த்தாலும், ஆழ்கடல் போன்ற அமைதியுடன்தான் இருப்பார்கள்.

கன்னியரைக் கவரும் ராசி

கன்னியா ராசிக்காரர்களின் பேச்சும், சிரிப்பும் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும். இவர்களைச் சுற்றிப் பெண்களின் கூட்டம் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், வசதியான பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். மிக அரிதாக இவர்கள் ஏழைப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தாலும், அந்தப் பெண் இவர்களை தனது திறமையால் கோடீஸ்வரர் ஆக்கிவிடுவாள். அத்தகைய தகுதி பெற்ற பெண்ணைத்தான் ஏழையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வர்.

தொழிலில் நேர்மை

தொழிலில் நேர்மையாக இருக்கும் இவர்கள், என்னத்த தொழில் செய்தாலும் சொந்த தொழில் போல அக்கறையுடன் செய்வார்கள். இவர்கள்தான் முதலாளியோ என்று பலரும் கருதும்படி நடந்துகொள்வர். அடிமையாக வேலை பார்ப்பதை இவர்கள் விரும்புவதில்லை. சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும், அந்த வேலையின் முழுக்கட்டுப்பாடும் இவர்களிடமே இருக்கும். யாரிடமும் கைகட்டி சேவகம் செய்யும் பழக்கம் இவர்களுக்கு இருக்காது. இவர் கிளார்க் வேலை பார்த்தாலும், முதலாளி இவருடைய ஆலோசனையை கேட்பவராக இருந்தால் மட்டுமே இவர் அந்த அலுவலகத்தில் கிளார்க் ஆக இருப்பார்.

ஆலோசனை உதவி

எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ள கன்னி ராசிக்காரர்கள், பெரிய அளவில் அதற்காக அலட்டிக் கொள்ளாமல், ஆராய்ந்து அறிந்து நல்ல ஆலோசனைகளை வழங்கி, அவர்களே அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளும்படி உதவுவார்கள். தன்னால்தான் அவருடைய பிரச்னை தீர்ந்ததென்று யாரிடமும் பறைசாற்றுவதும் கிடையாது. கடன் வாங்கினாலும், கருத்துச் சொன்னாலும் மூன்றாம் நபருக்கு தெரியாமல் நடந்துகொள்வர்.

பல வருமானம்

கன்னியாராசிக்காரர் நிதி நிர்வாகத்தில் கெட்டிக்காரர். பல வழிகளிலும் பொருள் சம்பாதிப்பார். ஆனால், வேர்த்து விறுவிறுத்து சாப்பிடாமல், தூக்கம் இல்லாமல் அலைந்து திரிந்து சம்பாதிப்பதை இவர் விரும்பு
வதில்லை. புத்திசாலித்தனமான வேலைகளில் ஈடுபட்டு, இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை ஒரே சமயத்தில் செய்து தனக்குத் தேவையான வருமானத்தை உருவாக்கிக் கொள்வர். வருமானத்தை அனாவசியமாக செலவு செய்யாமல், மிகவும் கவனமாக 10,12, நிதித்திட்டங்களை பற்றி விசாரித்து அறிந்து படித்துத் தெரிந்துகொண்டு, தக்க திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இவர்கள் ஸ்டாக், ஷேர், எல்.ஐ.சி போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள். இதுபற்றி அவர்கள் வெளியே பேசுவது கிடையாது. ஆனால், நீங்கள் விவரம் கேட்டால் மிகத் தெளிவாக எடுத்துரைத்து, உங்களையும் அத்தகைய முதலீடுகளில் சேர்த்துவிடுவார்.மொத்தத்தில் கன்னியா ராசிக்காரர்களின் நட்பு கிடைப்பது ஒரு வரம்.

 

The post கன்னியாராசியினர் எப்படி? appeared first on Dinakaran.