முத்துசுவாமி தீட்சிதர் காட்டும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

பகுதி 4

ஸ்ரீவித்யாவின் அடிப்படை தத்துவம் அத்வைதம். ஸ்ரீவைஷ்ணவத்தின் தத்துவம் விசிஷ்டாத்வைதம்.
ஸ்ரீ முத்துசுவாமி தீக்ஷிதர் மன்னார்குடி ராஜகோபாலனின் மீது எட்டு விபக்தி கிருதிகள் (கீர்த்தனைகள்) செய்திருக்கிறார். விபக்தி என்றால் வேற்றுமை உருபுகள் என்று அர்த்தம். சமஸ்கிருதத்தில் எட்டு வேற்றுமை உருபுகள் உண்டு. இந்த எட்டு வேற்றுமை உருபுகளை வைத்து கீர்த்தனைகளை செய்திருக்கிறார். அந்த எட்டு கீர்த்தனைகளில் ஒரு கீர்த்தனையில் அத்வைத விசிஷ்டாத்வைதாலயம் ஸ்ரீ ராஜகோபாலம் என்கிறார். அத்வைதமும் விசிஷ்டாத்வைதமும் எங்கு இணைகிறதெனில் மன்னார்குடி ராஜகோபாலனிடம்தான். ஏனெனில் அத்வைத பரமாக இருக்கக் கூடிய ஸ்ரீவித்யா ஒரு பக்கமும், விசிஷ்டாத்வைத பரமாக இருக்கக் கூடிய ஸ்ரீவைஷ்ணவம் ஒரு பக்கம் என்று இரண்டும் இங்குள்ள ஸ்ரீவித்யா ராஜகோபாலனிடம் இணைகிறது. அந்த எட்டு கீர்த்தனைகளில் ராஜகோபாலம் பஜேஹம்… என்று தொடங்கும் இன்னொரு கீர்த்தனையும் உண்டு. இந்த கீர்த்தனையில் முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்துக் காட்டுகிறார். இந்த கீர்த்தனையின் ஒரு வரியில் ஜீவேச ஜகன் மோகினி ரூபம்… என்று ராஜகோபாலனை குறிப்பிடுகிறார்.

இங்கு என்னவொரு ஆச்சரியம் எனில், ராஜகோபாலன் நம் கண்களுக்குத் தெரியும்படியான புருஷரூபத்தில்தான் இருக்கிறான். இப்படிப் பார்த்தால் ஜீவேச ஜகன் மோகன ரூபம் என்றுதான் பாடியிருக்க வேண்டும். ஆனால், தீக்ஷிதர் என்ன சொல்கிறார் எனில், ஜீவேச ஜகன் மோகினி ரூபம் என்று பாடுகிறார். இங்கு தீக்ஷிதர் இரண்டு விஷயங்களை காண்பித்துக் கொடுக்கிறார். இப்போது நம் முன்னால் இருக்கக்கூடிய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்த பெருமாள்… அதனால், ஜீவேச ஜகன் மோகினி ரூபம் என்பது கொஞ்சம் வெளிப்படையான அர்த்தம். ஆனால், இன்னொரு அர்த்தம் இப்போது நாம் பார்க்கக்கூடிய புருஷ ரூபத்தில் ராஜகோபாலனாக இருந்தால் கூட, அவன் உள்முகத்தில் லலிதாவாக இருக்கிறான். அதனால் மோகினியாக இருக்கிறான். வெளியில் பார்க்கக்கூடிய இந்த ரூபத்தைத் தாண்டி சூட்சுமமாக அம்பிகையினுடைய ரூபத்தில் இருப்பதால், ஜீவேச ஜகன் மோகினி ரூபம் என்று பாடுகிறார். இங்கு மோகினி அவதாரம் எடுத்த புராண வரலாறையும் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இப்போது நாம் பார்த்து வந்த ஸ்ரீவித்யா தத்துவங்களையெல்லாம் தனக்குள் கொண்டு, தானே கோபால சுந்தரியாக இருக்கிறான் என்று பார்த்தோம்.

இந்த கோபால சுந்தரி என்கிற தத்துவத்தை தீக்ஷிதர் நமக்கு ஒரேயொரு வார்த்தையால் காண்பித்துக் கொடுக்கிறார். லலிதா திரிபுரசுந்தரியும், கோபாலனும் இணைந்த வடிவம் ராஜகோபாலன்.இந்த மோகினி என்கிற வார்த்தைக்கு முன்னால், ஜீவேச ஜகன் மோகினி என்கிற மூன்று வார்த்தைகள் சேர்க்கிறார். இன்னும் எளிமையாக தீட்சிதர் ஒரு தத்துவத்தைச் சொல்கிறார் பாருங்கள். அதாவது ஜீவன், ஈஸ்வரன், ஜகத் என்கிற மூன்றையும் சேர்த்து இந்த மூன்றுக்குள்ளும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்லி நமக்குக் காண்பிக்கக்கூடிய மோகினி யாரெனில் ராஜகோபாலன். நாம் எந்த தத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, உபநிஷதம் எடுத்துக் கொண்டாலும் சரி நமக்குக் காண்பித்துக் கொடுக்கக் கூடிய விஷயங்கள் இந்த மூன்று விஷயங்கள்தான். இந்த ஜகத் என்கிற உலகம் இருக்கிறது. இந்த ஜீவன் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணமானவன் என்றொருவன் இருக்க வேண்டும். அவன் ஈஸ்வரன். இந்த மூன்று தத்துவங்கள்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது.

இந்த உலகத்தை நாம் பார்க்கிறோம். இந்த உலகத்தை யார் பார்க்கிறார் எனில், ஜீவாத்மா பார்க்கிறான். அப்போது ஜகத் இருக்கிறது. ஜீவாத்மா இருக்கிறது. இது எதுவுமே நம்முடைய சிருஷ்டி கிடையாது. இந்த ஜீவாத்மாவால் இந்த ஜகத்தை அனுபவிக்க முடிகிறதே தவிர, இது சிருஷ்டி செய்யவில்லை. இதையெல்லாம் சிருஷ்டி செய்பவன் என்றொருவன் இருக்க வேண்டும். அவனே ஈஸ்வரன். இந்த விஷயம்தான் எல்லா தத்துவங்களுக்கும் அடிப்படையானதாகும். இப்போது அது ஒன்றாக இருக்கிறதா… அல்லது வேறுவேறாக இருக்கிறதா அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்பாக இருக்கிறதா என்பதுதான் இங்கு தத்துவங்களாக உள்ளன. ஜீவன் ஜகத் ஈஸ்வரன் என்கிற மூன்றுமே ஒன்றுதான் என்று சொல்வது அத்வைத தத்துவம். அப்படியல்ல, மூன்றும் வேறுவேறாக இருக்கிறது என்று சொல்வது துவைத தத்துவம். மூன்றும் வெவ்வேறாகத் தெரிந்தாலும், ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது என்று சொல்வது விசிஷ்டாத்வைத தத்துவம். அப்போது எந்த தத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்று விஷயங்கள்தான் சொல்லப்படுகிறது. இங்கு தீக்ஷிதர் ஜீவேச ஜகன் மோகினி ரூபம் என்று சொன்னதால், இந்த இடத்தை அத்வைதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். விசிஷ்டாத்வைதமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அத்வைதபரமாக எடுத்துக்கொண்டால், ஜீவன், ஜகத், ஈஸ்வரன் போன்ற வேறுபாட்டை எடுத்துவிட்டு, மூன்றும் ஒன்றுதான் என்று எவன் காண்பித்துக் கொடுக்கிறானோ அவன் மோகினி ரூபத்தில் இங்கு இருக்கிறான். அதே விஷயத்தில் விசிஷ்டாத்வைதத்தில் சித்து, அசித்து, ஈஸ்வரன்… இது விசிஷ்டாத்வைத தத்துவம். சித்து என்பது ஜீவன். அசித்து என்பது ஜகத். ஈஸ்வரன் என்பது பரமாத்மா. இந்த மூன்றையும் சொல்லக் கூடியது விசிஷ்டாத்வைத தத்துவம். அல்லது விசிஷ்டாத்வைதத்தினுடைய அடிப்படை இதுதான். இப்படி மூன்றாக இருக்கிறது. ஆனால், இந்த ஜீவாத்மாவும் இந்த உலகமும் ஈஸ்வரனுக்கு சரீரமாக இருக்கிறது. அவன் சரீரியாக இருக்கிறான் என்பது விசிஷ்டாத்வைத தத்துவம். இந்த மூன்றையும் காண்பிப்பதற்காகத்தான் ஸ்ரீ வைஷ்ணவ சந்நியாசிகள் எல்லோரும், மூன்று தண்டம் சேர்த்துக் கட்டி த்ரிதண்டமாக வைத்திருப்பார்கள். அந்த த்ரிதண்டம் வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். சித்து… அசித்து… ஈஸ்வரன்..

என்கிற மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அதேசமயம் மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது இந்த ஜீவனும் ஜகத்தும் ஈஸ்வரனுக்கு சரீரமாக இருக்கிறது. இப்போது மூன்று தத்துவங்களையும் நமக்கு உணர்த்தக் கூடிய ரூபத்தில் இருப்பதனால், ஜீவேச ஜகன் மோகினி ரூபம் என்று விசிஷ்டாத்வைத பரமாகவும் இதற்கு விளக்கம் எடுத்துக் கொள்ளலாம். இப்படியாக மேலே சொன்ன இரண்டு தத்துவங்களையும் இந்த கீர்த்தனைகளின் மூலமாக முத்துசுவாமி தீக்ஷிதர் காண்பித்துக் கொண்டே வருகிறார். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் திருக்கோவிலை அபிமான ஸ்தலம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆழ்வார்களினுடைய மங்காளாசாசனம் இல்லாததால் நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் வரவில்லை. ஆனால், பின்னால் வந்த ஆச்சார்யர்கள் நிறைய பேருக்கு அபிமான ஸ்தலமாக இருந்திருக்கிறது. இப்படியிருக்கும்போது இந்தப் பெருமாளுக்கு பாசுரம் சேவிக்க வேண்டுமெனில், எப்படி பாசுரம் சேவிப்பது என்று பார்க்கும்போது ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யார்கள் ஒரு விஷயத்தை காண்பித்துக் கொடுத்திருக்கிறார்கள். அது என்ன என்று அடுத்த இதழில் பார்ப்போம்.
(வளரும்)

 

The post முத்துசுவாமி தீட்சிதர் காட்டும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் appeared first on Dinakaran.

Related Stories: