×

அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: வீடியோ வைரலால் தூதரகம் விளக்கம்

நியூயார்க்: அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய இளைஞருக்கு நேர்ந்த கொடுமை வீடியோ வைரலான நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் விளக்கம் கொடுத்துள்ளது. அமெரிக்காவுடன் குடியேற்றப் பிரச்னைகள் மற்றும் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது என்று கடந்த மே 29 அன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‘இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், சுமார் 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 62 சதவீதம் பேர் வர்த்தக ரீதியிலான விமானங்களில் இந்தியா திரும்பியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவின் மாணவர் விசா தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை இந்தியா கவனித்து வருவதாகவும், வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலனே இந்திய அரசின் தலையாய கடமை என்றும் அவர் கூறினார்.

மேலும், ‘விசா வழங்குவது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த முடிவு என்றாலும், இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வித் திட்டங்களில் சேர முடியும் என நம்புகிறோம்’ என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். சமீபத்தில், அமெரிக்காவின் நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில், இந்தியர் ஒருவர் இன்னல்களைச் சந்தித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இது தொடர்பான வைரலான காணொளி ஒன்றில், இந்திய இளைஞர் ஒருவரை இருவர் தரையில் அழுத்திப் பிடிப்பது போன்ற காட்சிகள் இருந்தன. ஆனால் அதில் இருப்பவர்களின் நாடு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம், ‘நெவார்க் விமான நிலையத்தில் இந்தியர் ஒருவர் சிரமங்களை எதிர்கொள்வதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளை நாங்கள் கவனித்தோம். இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தியக் குடிமக்களின் நலனைப் பாதுகாப்பதில் தூதரகம் எப்போதும் உறுதியுடன் செயல்படும். பாதிக்கப்பட்ட இந்தியருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தூதரகம் தீவிரமாக முயன்று வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: வீடியோ வைரலால் தூதரகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Newark Airport, USA ,Embassy ,New York ,Indian embassy ,Newark Airport ,United States ,India ,Indians ,
× RELATED ஏமனில் சவுதி குண்டு மழை: 7 பேர் பலி