×

சீன ராணுவம் குவிப்பு பலுசிஸ்தான் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலுச் தலைவர் அவசர கடிதம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சீன ராணுவம் களமிறங்க உள்ளதாக பலுச் தலைவர் ஒருவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியப் பகுதிகளில் சீன – பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை அமைப்பதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குவாடர் துறைமுகம் மற்றும் விமான நிலையம் வர்த்தகப் பயன்பாடு என்ற பெயரில் ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கிடையில், கடந்த 2025ஆம் ஆண்டு பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலுச் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டியிருந்தனர். கடந்த 79 ஆண்டுகளாகப் பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு ஆளாகி வரும் பலுசிஸ்தான் மக்கள், தங்களை விடுவிக்கக் கோரி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பலுச் தலைவர் மிர் யார் பலூச், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சீனா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக அடுத்த சில மாதங்களில் பலுசிஸ்தானில் ராணுவத்தை நிறுத்தத் தயாராகி வருகிறது. இது மிகவும் ஆபத்தான கட்டமாகும். பாகிஸ்தானின் அரச ஆதரவு பெற்ற தீவிரவாதத்தை வேரோடு அழிக்கவும், பிராந்திய இறையாண்மையைக் காக்கவும் இந்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். பலுசிஸ்தானைத் தனி நாடாக அங்கீகரித்து, இந்தியாவில் எங்கள் தூதரகத்தைத் திறக்க அனுமதிக்க வேண்டும்.

பலுசிஸ்தான் பல காலங்களாகவே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. அடுத்த சில மாதங்களுக்குள் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சீனா தமது ராணுவ படைகளை நிலை நிறுத்தக்கூடும். இது அப்பகுதிக்கும், இந்தியாவுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறி உள்ளது. இந்தியாவுக்கும், பலுசிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தேவை. பாக். அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கவும், பிராந்திய இறையாண்மையை காக்கவும் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : India ,Balochistan ,Minister ,Jaishankar ,New Delhi ,Baloch ,Indian External Affairs ,Pakistan ,China-Pakistan Economic Corridor ,CPEC ,Indian ,
× RELATED ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவு...