நைரோபி: கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சவுத் சீ என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கென்யா செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் 16 மாடிகளை கொண்டது.கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளது. ஆனால் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணமோ அல்லது அதில் எத்தனை பேர் இறந்தனர் என்பது பற்றி கென்ய அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த விபத்தில் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
