×

ரியால் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 7 பேர் பலி

துபாய்: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் கடந்த 2022ம் ஆண்டு தலைக்கு ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி காவல்நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்தது. இதற்கு பின் தற்போது மீண்டும் ஈரானில் போராட்டம் வெத்துள்ளது. ஈரானில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து உள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு மீண்டும் பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. இது கிராமப்புற மாகாணங்களுக்கும் பரவியுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்பு படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. இதில் புதனன்று இரண்டு பேரும், வியாழன்று ஐந்து பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று 7 ஆக அதிகரித்துள்ளது. லூர் இன மக்கள் வசிக்கும் நான்கு நகரங்களில் பெரும்பாலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

லோரஸ்தான் மாகாணத்தில் உள்ள அஸ்னா நகர தெருக்களில் ஏராளமான பொருட்கள் சூறையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு சத்தம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிடும் சத்தத்துடன் கூடிய வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இங்கு மட்டும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன. சஹார்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் உள்ள லோர்டேகான் நகரில் போராட்டக்கார்கள் சாலைகளில் திரண்டு நிற்கிறார்கள். மேலும் துப்பாக்கி சூடு சத்தமும் கேட்கின்றன. வியாழன்று போராட்டத்தின்போது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிகின்றன.

ஈரானில் அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகளுக்கான அப்தோர்ரஹ்மான் போருமாண்ட் மையமானது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் இரண்டு பேரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்றும் அடையாளம்காட்டியது. ஈரானின் ரியால் நாணயத்தின் மதிப்பு வேகமாக சரிந்து ஒரு டாலரின் மதிப்பானது 1.4மில்லியன் ரியால்களாக உள்ளது. இந்த வீழ்ச்சிக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே ஐரோப்பாவை தளமாக கொண்ட குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்ட மேலும் இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மற்றொரு நடவடிக்கையில் பாதுகாப்பு படையில் 100 கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* டிரம்ப் எச்சரிக்கை
ஈரானில் போராட்டங்கள் வெடித்து 7 பேர் பலியான நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், ‘‘அமைதியான போராட்டக்காரர்களை வன்முறையாக கொன்றால் அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதற்கு வரும். நாங்கள் ஆயத்த நிலையில் இருக்கிறோம்” என்று ஈரான் அரசை எச்சரித்திருந்தார். சிறிதுநேரத்திற்கு பின் ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு சபை செயலாளரான அலி லாரிஜானி , இஸ்ரேலும், அமெரிக்காவும் இந்த போராட்டங்களை தூண்டி விடுகின்றன. உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவது முழு பிராந்தியத்திலும் குழப்பத்திற்கும் அமெரிக்க நலன்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதை டிரம்ப் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Iran ,Dubai ,Mahsa Amini ,
× RELATED ஏமனில் சவுதி குண்டு மழை: 7 பேர் பலி