×

துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு எதிரொலி ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பல்டி: மாநில அரசுடன் மோதல் இல்லை என புது விளக்கம்

சென்னை: துணைவேந்தர் மாநாட்டுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களின் மாநாடு உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 25, 26ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 22ம் தேதி வெளியாகினது. இதற்கு சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உதகையில் வரும் ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாடு நடைபெற இருப்பதை, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே அதிகாரப் போட்டி நடைபெறுவதைப் போல சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகின்றனர். இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்த மாநாட்டில், இந்தியா முழுவதும் உள்ள கல்வி மற்றும் தொழில்துறையில் புகழ்பெற்ற தலைவர்கள் தங்களது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.

வளர்ந்து வரும் சவால்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் விரிவடைந்து வரும் எல்லைகள் குறித்து விவாதிப்பதற்கும், இந்த சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்த வழிமுறைகள் வகுக்கப்படும். இந்த மாநாட்டை தொடர்ந்து நடத்துவதால், நேர்மறையான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. கற்பித்தல், கற்றல், புதுமை மற்றும் கல்வி நிறுவனத்தில் சிறந்து விளங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த கல்விப் பயிற்சியை சில தவறான தகவல் ஊடக அறிக்கைகள் அரசியல் திருப்பமாகக் காட்டி, சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புடன் தவறாக இணைத்து, ராஜ்பவனுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியாகக் காட்ட முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. இவை முற்றிலும் தவறு. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு எதிரொலி ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பல்டி: மாநில அரசுடன் மோதல் இல்லை என புது விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Governor ,R.N. Ravi ,state ,Vice-Chancellors' Conference ,Chennai ,Governor's Office ,of State ,Central and Private ,Universities and Educational Institutions ,Tamil Nadu ,Udhagamandalam… ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...