எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

அப்போது டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. பொன்னி ஆரம்பகட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு செய்தது. இதனிடையே தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்திற்கு அதிகமாக 50 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டிக்கா ராமன் அமர்வு, டெண்டர் பணிகளில் முறைகேடு தொடர்பான வழக்கில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்கிறோம். மற்ற வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர். அதேபோல சொத்துகுவிப்பு வழக்கையும் ரத்து செய்ய மறுத்துவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்கள், தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்கள்.

மனுவில், வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் ஒரு பொது ஊழியர், அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், விசாரணையின்போது 5 நிறுவனங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பிலும், இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அரசு தரப்பில் இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி மறுப்பு தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: