×

உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

டேராடூன் : டெல்லி-டேராடூன் வந்தே பாரத் ரயிலை காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியே, இந்த ரயில்களை தொடங்கி வைத்து வருகிறார்.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் முழுவதுமான மின்மயமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வந்தே பாரத் ரயில் அம்மாநில ரயில் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக இந்த ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கடந்த 18ம் தேதி பூரியிலிருந்து கொல்கத்தா வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைத்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையில் உள்ள அம்சங்கள் பயணிகளுக்கு மறக்க முடியாத புதிய அனுபவங்களை அளிப்பதாக தெரிவித்தார். சர்வதேச நாடுகள் இந்தியாவின் மீது அளவில்லா நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சி காலங்களில் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என தெரிவித்த பிரதமர், தமது தலைமையிலான ஆட்சியில் ஒவ்வொரு இந்தியரும் வளர்ச்சியை எட்டி வருவதாக கூறினார். 2014ம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே துறை மாபெரும் மாற்றத்தை கண்டு வருவதாக கூறிய பிரதமர், ஆண்டு தோறும் 6,000 கிமீ தொலைவிற்கு ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். விழாவில் 100% மின்மயம் ஆக்கப்பட்ட ரயில் பாதைகளை கொண்ட மாநிலமாக உத்தரகண்ட் திகழ்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.

The post உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Uttarakhand ,Dehradun ,Delhi ,Deradun ,India ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி