இதில் சுரங்கத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுமார் 60 மீட்டர் தூரத்திற்கு சுரங்கத்திற்குள் கட்டுமான இடிபாடுகள் விழுந்தன. இவற்றை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஓஎன்ஜிசி, பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை நிபுணர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக, 6 அங்குல குழாயை இடிபாடுகள் வழியாக உள்ளே செலுத்தி தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்கள் சுரங்கத்தில் நலமுடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகர் கனரக இயந்திரம் கொண்டு, சுரங்க இடிபாடுகளில் கிடைமட்டமாக 57 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு, 800 மிமீ அகல இரும்பு குழாய் செலுத்தி அதன் வழியாக தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 46.8 மீட்டர் தூரம் வரை துளையிட்ட நிலையில், ஆகர் இயந்திரத்தின் பிளேடு உடைந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, உடைந்த பிளேடு வெளியில் எடுக்கப்பட்டது.
மீதமுள்ள பகுதியை ‘எலி வளை’ சுரங்க நுட்பத்துடன் கைக்கருவிகளால் துளையிட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, 12 எலி வளை தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நேற்று முன்தினம் இப்பணி தொடங்கியது. அதே சமயம், மாற்று ஏற்பாடாக சுரங்கத்தின் மேல் பகுதியில் 80 மீட்டர் தூரத்திற்கு செங்குத்தாக துளையிடும் பணியும் நடந்து வந்தது.
இந்நிலையில், மீட்புப்பணியின் 17வது நாளாக நேற்று, எலி வளை துளையிடும் பணியில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 24 மணி நேரத்திற்குள் இடிபாடுகளில் 12 மீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டது. மொத்தம் 58 மீட்டர் துளையிடப்பட்ட நிலையில், பிற்பகல் 1.30 மணி அளவில் துளையிடும் பணி முடிந்ததாகவும் விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் பரவின. இதனால் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டது.
ஆனால், மாலை 4 மணி அளவில் பேட்டி அளித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அதா, மேலும் 2 மீட்டர் தூரத்திற்கு துளையிட வேண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தப் பணிகள் இரவு 7.45 மணி அளவில் முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் 800 மிமீ அகல இரும்பு குழாய் வழியாக உள்ளே சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு தொழிலாளர்களாக அவர்கள் உள்ளேயிருந்து மீட்டு அழைத்து வந்தனர். முதல் தொழிலாளியை இரவு 8 மணி அளவில் வெளியில் அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்கும் மாலை அணிவித்து வரவேற்று நலம் விசாரித்தனர். பின்னர் தொழிலாளர்களுக்கு அங்கேயே உள்ள மருத்துவ முகாமில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சின்யாலிசார் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 45 நிமிடத்தில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் மூலம் 17 நாட்களாக தொழிலாளர்களுக்காக வெளியில் காத்திருந்த அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இனிப்புகளை பரிமாறி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். மீட்புப்பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இது மீட்புப்பணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்ட தொழிலாளர்களும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
மீட்புக் குழுவுக்கு காங்கிரஸ் பாராட்டு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,’ தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டது அனைவருக்கும் மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 140 கோடி இந்தியர்களின் பிரார்த்தனையால், என்.டி.எம்.ஏ உட்பட அனைத்து அமைப்புகளின் செயல்பாடும் இறுதியாக வெற்றிகரமாக முடிந்தது. தொழிலாளர் சகோதரர்களுக்கு உடனடியாக சுகாதார நலன்கள் மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
45 நிமிடத்தில் 41 பேரும் மீட்பு
சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவு 8 மணிக்கு முதல் தொழிலாளி வெற்றிகரமாக வெளியே வந்தார். உடனே அங்கிருந்த அனைவரும் கைதட்டி உற்சாகத்தை வெளிக்காட்டினர். இதன் பின் அடுத்தடுத்து ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். சுமார் 45 நிமிடத்தில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மிகவும் திருப்தி: மோடி
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘உத்தரகாசியில் தொழிலாளர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. மீட்கப்பட்ட தொழிலாளர்களின் தைரியமும் பொறுமையும் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நமது இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகவும் திருப்திகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் இந்தக் குடும்பங்கள் காட்டிய பொறுமையும் தைரியமும் மிகுந்த பாராட்டுக்குரியது. மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரையும் வணங்குகிறேன். அவர்களது துணிச்சலும் உறுதியும் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஒரு அற்புதமான உதாரணமாகி உள்ளனர்’’ என கூறி உள்ளார்.
உள்ளூர் மக்களும் கொண்டாட்டம்
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட வேண்டுமென சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களும் கிராம மக்களும் பல்வேறு பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், நேற்று தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒவ்வொருவரும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொழிலாளர் மீட்கப்பட்டதை உலகிற்கு
அறிவித்த தமிழர்
சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொடக்கத்தில் இருந்தே அதிகளவிலான தமிழர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் முதல் தொழிலாளர் மீட்கப்பட்டார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை மீட்பு குழுவில் இருந்த பொறியாளர் சந்திரன் என்ற தமிழர் முதலாவதாக உலகிற்கு அறிவித்தார். அவரது பேட்டி உலககெங்கும் டிவிக்களில் ஒளிபரப்பானது.
₹1 லட்சம் நிதி
மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு தலா ₹1 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
பிற்பகலில் பரபரப்பு
நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சுரங்கப் பகுதியில் செய்தியாளர்களை சந்தித் மாநில அரசின் தகவல் துறை தலைவர் பன்சி தார் திவாரி, ‘‘துளையிடும் பணி முடிந்தது’’ என அறிவித்தார். அதைத் தொடர்ந்து தொழிலாளர்களை வரவேற்க மாலைகள் கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விமானப்படையின் சினுக் ஹெலிகாப்டர் தயாராக கொண்டு வரப்பட்டது. சுரங்கத்தின் வெளியே சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என மகிழ்ச்சியில் கோஷமிட்டனர்.
அதன்பிறகுதான் மேலும் 2 மீட்டர் துளையிட வேண்டியிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. எலிவளை நிபுணர்களின் கைகளில் இருந்த டார்ச் வெளிச்சத்தின் பிரபலிப்பு இடிபாடுகளில் தெரிந்துள்ளது.
மீட்புப் பணியில் தமிழர்கள்
சுரங்கத் தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனத்தின் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களது முயற்சியினால் தான் தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது எண்டாஸ்கோபி கேமரா மூலம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ரிக் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான பிஆர்டி நிறுவனம் தயாரித்த ஜிடி-5 என்ற நவீன ரிக் பயன்படுத்தப்பட்டது. இது தவிர மீட்பு பணியில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் சண்முகம் என்பவர் ஆகர் இயந்திரத்தை இயக்கும் பிரிவின் தலைமை பொறுப்பை வகித்திருந்தார்.
எந்தெந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்?
சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் அதிகபட்சமாக 15 பேர் ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் உபி, இமாச்சல், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், உத்தரகாண்ட் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
தடை செய்யப்பட்டதுதான் உயிரை காப்பாற்றியது
பொதுவாக நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுக்க ஒரே ஒரு நபர் மட்டுமே நுழையக் கூடிய அளவுக்கு குறுகலான சிறிய துளையிடுவதுதான் எலி வளை சுரங்கம். இத்தகைய எலி வளை சுரங்க நுட்பத்தை பயன்படுத்தி நிலக்கரி எடுப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2014ல் தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்த நுட்பம் இன்னமும் சுரங்கப் பணிகளில் சத்தமின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் கூறுகையில், ‘‘எலி வளை சுரங்க நுட்பம் சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் 41 உயிர்களை காப்பாற்ற அந்த நிபுணர்களின் திறமை, அனுபவத்தை நாங்கள் பயன்படுத்தி உள்ளோம்’’ என்றார். சில்க்யாரா சுரங்கத்தில் எலி வளை சுரங்கம் மூலம் 41 தொழிலாளர்களை மீட்டவர்கள் டெல்லி, ஜான்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களை இந்த சுரங்கப்பாதையை கட்டும் நிறுவனமான நவயுகா இன்ஜினியர்ஸ் அழைத்து வந்துள்ளது.
திக் திக் திக்…
நவம்பர்
12 தீபாவளி தினத்தன்று அதிகாலை 5.30 மணியளவில் நிலச்சரிவைத் தொடர்ந்து பிரம்மகால்-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வந்த சில்க்யாரா-தண்டல்கான் கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதை தொடர்ந்து என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், பிஆர்ஓ, என்எச்ஐடிசிஎல் மற்றும் ஐடிபிபி போன்ற பல்வேறு மீட்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் சுரங்கத்தின் சிக்கிய தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், மின்சாரம் மற்றும் உணவு வழங்க தேவையான ஏற்பாடுகளையும், மீட்பு பணியையும் முதற்கட்டமாக தொடங்கினார்கள்.
13 முதலில் சுரங்கத்தின் சிக்கிய 41 தொழிலாளர்களை ஆக்சிஜன் சப்ளை செய்யும் குழாய் மூலம் தொடர்பு கொண்டனர். அதன் அடிப்படையில் சுரங்கத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் புதிய இடிபாடுகள் தொடர்ந்து விழுந்ததால் சுமார் 60 மீட்டருக்கு இடிபாடுகள் பரவின.
14 800 மற்றும் 900 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட எஃகு குழாய்கள் கிடைமட்டமாக தோண்டுவதற்காக ஒரு ஆகர் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகள் வழியாக செருகுவதற்காக சுரங்கப்பாதை தளத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும் இதனால் உருவாக்கப்பட்ட குழியிலிருந்து அதிக இடிபாடுகள் விழுந்ததில் இரு தொழிலாளர்கள் சிறிய காயம் அடைந்தனர்.
15முதல் துளையிடும் இயந்திரத்தில் அதிருப்தி அடைந்த என்.எச்.ஐ.டி.சி.எல்., மீட்பு பணியை விரைவுபடுத்த டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட அதிநவீன ஆகர் இயந்திரத்தை கேட்டது.
16துளையிடும் இயந்திரம் மலைப்பகுதியில் நிறுவப்பட்டது. நள்ளிரவைத் தாண்டி மீட்பு பணி தொடங்கியது.
17இயந்திரம் பிற்பகலில் 57 மீட்டர் இடிபாடுகள் வழியாக சுமார் 24 மீட்டர் துளையிட்டு நான்கு குழாய்கள் செருகப்பட்டன. ஐந்தாவது குழாய் பதிக்கும் போது அங்கு தடை ஏற்பட்டதால் குழாய் நுழைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக மற்றொரு உயர் செயல்திறன் கொண்ட ஆகர் இயந்திரம் உடனடியாக கொண்டு வரப்பட்டது. அன்று மாலையில், ஐந்தாவது குழாய் பதிக்கும் போது சுரங்கப்பாதையில் ஒரு பெரிய விரிசல் சத்தம் கேட்டது. அப்பகுதியில் மேலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டதால் அனைத்து பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
18 சுரங்கப்பாதையின் உள்ளே டீசலால் இயக்கப்படும் 1,750-குதிரை ஆற்றல் கொண்ட அமெரிக்கன் ஆகர் மூலம் உருவாக்கப்பட்ட அதிர்வுகளால் மேலும் சரிவு ஏற்பட்டு இடிபாடுகள் அதிகரித்தன. இதனால் மீட்புப் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்ததால் தோண்டுதல் பணி நிறுத்தப்பட்டது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிடுவது உட்பட, ஒரே நேரத்தில் ஐந்து வெளியேற்றும் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
19 துளையிடுதல் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் மீட்புப் பணியை ஆய்வு செய்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, பெரிய ஆகர் இயந்திரத்துடன் கிடைமட்டமாக குழாய் பதிப்பதே சிறந்தது என்று தெரிவித்தார்.
20 பிரதமர் மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமியுடன் தொலைபேசியில் பேசி மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இருப்பினும், ஆகர் இயந்திரத்தின் பணிகளை ஒரு பாறாங்கல் தடுத்ததால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, 2 முறை தோல்விக்குப் பின் இடிபாடுகளுக்குள் 6 அங்குல குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதன் வழியாக முதல் முறையாக தொழிலாளர்களுக்கு திட உணவு, மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த குழாய் மூலம் தொழிலாளர்களை தொடர்பு கொள்வதும் எளிதானது.
21 சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோவை மீட்புக்குழுவினர் வெளியிட்டனர். மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்திருந்த தொழிலாளர்கள், குழாய் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை வெளியிட்டனர்.சுரங்கப்பாதையின் பால்கோட் முனையில் இரண்டு பள்ளங்கள் அமைக்கப்பட்டன. மேலும் மற்றொரு சுரங்கப்பாதை தோண்டுவதற்கான செயல்முறையைத் தொடங்கப்பட்டது. இந்த அணுகுமுறை 40 நாட்கள் வரை ஆகலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். அதே சமயம் என்எச்ஐடிசிஎல் சார்பில் சில்க்யாரா முனையிலிருந்து ஒரு ஆகர் இயந்திரத்தை உள்ளடக்கிய கிடைமட்டத்தில் துளை போடும் பணியை மீண்டும் தொடங்கியது.
22 800 மிமீ விட்டம் கொண்ட எஃகு குழாய்களின் கிடைமட்ட துளையிடல் சுமார் 45 மீட்டரை எட்டியது. மொத்தம் உள்ள 57 மீட்டரில் 12 மீட்டர் மட்டுமே மீதம் இருந்ததால் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மாலையில் சில இரும்பு கம்பிகள் ஆஜர் இயந்திரத்தின் சுற்றியதால் துளையிடும் பணி பாதிக்கப்பட்டது.
23 துளையிடும் பணியில் குறுக்கிட்ட இரும்பு கம்பிகள் சுமார் 6 மணி நேரம் கழிதூது அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து துளையிடும் பணி 48 மீட்டர் எட்டியதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் துளையிடும் இயந்திரம் இருக்கும் மேடையில் விரிசல் தோன்றியதால் மீண்டும் பணிகள்நிறுத்தி வைக்கப்பட்டன.
2425 டன் எடையுள்ள இயந்திரம் மூலம் மீண்டும் துளையிடும் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும் ஒரு உலோகம் உள்ளே இருந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன.
25இடிபாடுகள் வழியாக துளையிடும் ஆகர் இயந்திரத்தின் கத்திகள் துளையில் சிக்கின. இதனால் மீட்பு பணி மேலும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீதமுள்ள 10-12 மீட்டர் தூரத்தை கைமுறையாக துளையிடுதல் அல்லது மேலே இருந்து 86 மீட்டர் தூரம் செங்குத்தாக கீழே துளையிட அதிகாரிகள் திட்டமிட்டனர்.
26 மாற்று வழியை உருவாக்க 19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் பணி தொடங்கியது. துளையிடுதல் பணி நடக்கும் போது மீட்பு பாதையை உருவாக்க 700மிமீ அகலமுள்ள குழாய்கள் உள்ளே செருகப்பட்டன.
27 எலி-வளை சுரங்க நிபுணர்கள் 10 மீட்டர் இடிபாடுகளை கிடைமட்டமாக தோண்ட அழைக்கப்பட்டனர். அதே நேரத்தில், சுரங்கப்பாதைக்கு மேலே இருந்து செங்குத்து துளையிடல் 36 மீட்டர் ஆழத்தை எட்டியது.
28 இரவு 7 மணியளவில் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளின் கடைசி பகுதியை உடைத்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநிலபேரிடர் மீட்பு படையினர் இரும்பு குழாய் வழியாக உள்ளே நுழைந்து, சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வரத் தொடங்கினர்.
இரவு 8 மணி அளவில் முதல் தொழிலாளி மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டார். அதை தொடர்ந்து மற்ற தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டனர்.
The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு: l 17 நாள் போராட்டத்துக்கு பின் கிடைத்த வெற்றி l மீட்பு பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த உறவினர்கள் appeared first on Dinakaran.