ஊத்துக்கோட்டை அருகே 4 ஆண்டுகளாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பெரம்பூர் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கடந்த 4 ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து மற்றும் பல்வேறு குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த உயர்கோபுர மின்விளக்கை உடனடியாக மாற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரம்பூர் கிராமத்தில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வியாபாரம், வேலை விஷயமாகவும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கு இருசக்கர வாகனங்கள் மூலமாக பெரம்பூர் பேருந்து நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பெரியபாளையம் பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

மேலும் பாலவாக்கம், லட்சிவாக்கம், சூளைமேனி போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவமனையில் பிரசவம் மற்றும் உடல்நிலை பாதிப்பு போன்ற நோய்களுக்கு பெண்கள் சிகிச்சை பெற பெரம்பூர் பேருந்து நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். எனினும், அப்பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால், அவ்வழியே சென்று வருவதற்கு பெண்கள் மற்றும் வயதானவர்கள் அச்சப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பெரம்பூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்பி வேணுகோபால் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கடந்த 2019ம் ஆண்டு ₹3 லட்சம் மதிப்பில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த உயர்கோபுர மின்விளக்கு 3 மாதங்கள் மட்டுமே முறையாக இயங்கியது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக அந்த உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை. இதனால் கிராமப் பகுதிகளில் இருந்து பெரம்பூர் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் பேருந்தில் செல்வதற்கு வரும் மக்கள் மீண்டும் இருளிலேயே காத்திருக்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது.

மேலும், அந்த உயர்கோபுர மின்விளக்கில் பொருத்தப்பட்ட 4 பல்புகளில், தற்போது 2 மட்டுமே மந்தகதியில் எரிகிறது. இதுதவிர, அந்த உயர்கோபுர மின்விளக்கில் ஒரு பல்பு அந்தரத்தில் ஊஞ்சலாடியபடி தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பெரம்பூர் பேருந்து நிலையப் பகுதிகளில் மீண்டும் வாகன விபத்துகள் மற்றும் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

எனவே, பெரம்பூர் பேருந்து நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக எரியாமல் இருக்கும் உயர்கோபுர மின்விளக்கை உடனடியாக மாற்றி சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே 4 ஆண்டுகளாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: