×

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் எதிர்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் செயல்பாடுகளை முடக்குவதற்காக ஆளுநர்களை பயன்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், கர்நாடகம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி செயல்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் தொடுத்து அளிக்கப்பட்ட தீர்ப்புகள் ஆளுநரின் அதிகார வரம்பை அறுதியிட்டுக் கூறியிருக்கிறது. சமீபத்தில் மேற்கு வங்காள அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி மாநில அரசால் பரிந்துரை செய்யப்படுபவர்களை பல்கலைக் கழக துணை வேந்தர்களாக நியமிக்குமாறு மேற்கு வங்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடந்த 18 ஏப்ரல் 2024 அன்று உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில ஆளுநர்கள் நியமனம் செய்வார்கள்.

இதுதான் நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக் கழகங்களில் வேந்தராக மாநில ஆளுநராக இருக்கும் நிலையில் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்களில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஓராண்டு காலமாக துணைவேந்தர் நியமிக்க முடியாமல் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால், 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023 இல் தேர்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் காத்துக் கொண்டிருக்கிற அவலநிலை உள்ளது.

பல்கலைக் கழக சட்டப்படி துணைவேந்தர் தான் பட்டமளிப்பு சான்றிதழில் கையொப்பமிட வேண்டும். துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க மூன்று உறுப்பினர் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநர் நான்கு உறுப்பினர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்திருக்கிறார். இந்நிலையில் சட்டவிரோத போக்கு காரணமாக சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள், பொருளாதார பிரச்சினைகள், ஆராய்ச்சி குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை. அமைச்சரவையின் பரிந்துரை, ஆலோசனையின்படி தான் தமிழக ஆளுநர் செயல்பட வேண்டுமென்று அரசமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. நீண்டகாலமாக பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கென ஒரு நடைமுறை இருக்கிறது. அதன்படி செனட், சிண்டிகேட் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஒருவர் குழுவின் உறுப்பினராக செயல்படுவர்.

மேலும் ஆளுநர் தரப்பில் ஒருவர் என மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழு துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து மூன்று பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அந்த மூவரில் ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமிப்பார். இந்த நடைமுறையை தமிழக ஆளுநர் தொடர்ந்து முடக்கி வருவதால் பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை மாற்றும் வகையில் தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது, தேவைப்பட்டால் துணை வேந்தர்களை நீக்கம் செய்வதற்கான இறுதி முடிவை மாநில அரசே எடுப்பது என்பதற்கான மசோதாக்கள் 2022 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியது. துணை வேந்தர்களை மாநில அரசே நேரடியாக நியமிப்பது பல்கலைக் கழக சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி, ஆளுநர் இன்று வரையில் ஒப்புதல் வழங்காமல் முடக்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவிப்பாணைகளை வெளியிட்டது. இதற்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என். ரவி நான்காவதாக பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதி என்று பல்கலைக் கழக விதியில் இல்லாத ஒரு உறுப்பினரை நியமனம் செய்து அறிவிப்பாணைகளை வெளியிட்டார். இத்தகைய மோதல் போக்கு காரணமாக துணை வேந்தர் நியமனம், பல்கலைக் கழக நிர்வாகம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

மேற்கு வங்க அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்திருக்கும் உத்தரவு தமிழ்நாட்டிற்கும் பொருந்தும். ஏனெனில் மாநில பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மாநில அரசால் உருவாக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, மாநில அரசால் நிர்வகிக்கப்படுபவை. எனவே, பல்கலைக் கழகங்கள் மீது மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது என்பதையே உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்துகிறது. எனவே, சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்கிற ஆளுநர், மேற்கு வங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி துணைவேந்தர்கள் நியமனத்தில் தலையிடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டு பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்திற்கு தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் அதற்கான விளைவுகளை மேற்கு வங்க ஆளுநர் சந்தித்ததைப் போல தமிழக ஆளுநரும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamil Nadu ,CHENNAI ,Modi ,Tamil ,Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம்...