×

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

சென்னை : ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தை தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை 4 வாரங்களில் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி அடையாள அட்டைகள் வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு 2000த்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்து அடையாள அட்டைகள் வழங்குவதற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அடையாள அட்டைகள் வழங்கிய பின் அது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அறிக்கை தங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்து, ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும் கல்வராயன் மலைப் பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்தாவிட்டால், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர். மேலும் கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும் கல்வராயன் மலைப் பகுதியில் மினிப் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர். அத்துடன் ஆசிரியர்களுடன் பள்ளிகள் இயங்குவது தொடர்பாகவும் மருத்துவர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குவது தொடர்பாகவும் சாலை வசதிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

The post ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,KALLAKURICHI VISHARAYA ,KALVARAYAN HIGHLANDS ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...