×

ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த தேர்வு நடக்கிறது. செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. 2024ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1056 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 14ம் தேதி அறிவித்தது. மார்ச் 5ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வு எழுத இந்தியா முழுவதும் இருந்து சுமார் 6 லட்சம் பேரும், தமிழகத்தில் 25 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 16ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் ெவளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 14,627 பேர் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்த வரை சுமார் 650 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு நாளை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில் ”சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வு 20ம் தேதி(நாளை) தொடங்குகிறது.

இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. 21ம் தேதி(நாளை மறுநாள்) காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும், 2ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4) நடக்கிறது. தொடர்ந்து வரும் 28ம் தேதி இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும், 29ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடைபெறும். சென்னையில் சுமார் 600 பேர் மெயின் தேர்வு எழுதுகின்றனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும் ” என்றார். செல்போன் தடை: சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பி.சி.கே.ஜி. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இந்த தேர்வு நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக தேர்வு கூடங்களுக்கு செல்ல வேண்டும்.

தேர்வு தொடங்கிய 10 நிமிடங்களுக்கு பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்துக்கு செல்போன், மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபரகரணங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு சென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எதிர்வரும் தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படுவார்கள். தேர்வு கூடத்திற்கு விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்றும் யு.பி.எஸ்.சி. சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Central Government Staff Selection Commission ,UPSC ,IRS ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...