×

காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல சதி இந்திய அரசுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்: ஒன்றிய அரசு கடும் கண்டனம்

வாஷிங்டன்: காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசுக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் முக்கிய தலைவராக இருப்பவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர், சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராடி வருகிறது. பன்னுன், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையை பெற்றவர். இந்திய அரசால் கடந்த 2020ம் ஆண்டில் காலிஸ்தான் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு, ஜூன் 18ம் தேதி கனடாவின் சர்ரே நகரில் குருத்வாரா அருகே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டார். சீக்கிய பிரிவினைவாத தலைவரான இவர், காலிஸ்தான் தொடர்பான பல வழக்குகளில் இந்தியாவால் தேடப்பட்டு வந்தவர். இந்த வழக்கில் கனடாவில் வசித்து வந்த 3 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்திய உளவு அமைப்பான ‘ரா‘வின் உத்தரவுப்படி, நிஜ்ஜாரை கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தால், இந்தியா, கனடா இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது.

நிஜ்ஜார் கொலையை தொடர்ந்து அமெரிக்காவில் பன்னுனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரா அதிகாரியான விக்ரம் யாதவ் உத்தரவில் அமெரிக்காவில் கூலிப்படை அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பன்னுனை குறிவைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சி நடவடிக்கைக்கு அப்போதைய ரா தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற இந்திய தொழிலதிபர் நிகில் குப்தாவுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து நிகில் குப்தா செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரத்திலும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த இந்திய அரசு, இவ்விவகாரத்தை விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்தது. இந்நிலையில், சீக்கிய பிரிவினைவாத தலைவர் பன்னுன், தன்னை கொலை செய்ய சதி செய்ததாக இந்திய அரசுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முன்னாள் ரா தலைவர் சமந்த் கோயல், ரா அதிகாரி விக்ரம் யாதவ் மற்றும் தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

‘கனடாவில் நிஜ்ஜார் 34 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதே போல பன்னுனையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருந்தனர்’ என வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் மாவட்ட நீதிமன்றம், இந்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா முன்னாள் தலைவர் சமந்த் கோயல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 21 நாளில் பதில் அளிக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக நாளை அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மோடி அரசை பொறுப்பேற்க வைப்போம்
இந்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள பன்னுன், ‘‘இது சட்ட விவகாரம். எந்த தனிநபரும், பிரதமர் மோடியின் அரசு உட்பட எந்த அரசாங்கமும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை. மோடி அரசை பொறுப்பு கூற வைப்பதற்கான சட்ட நடவடிக்கை. இது அனைத்து நாடுகளிலும் உள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு விடுக்கும் செய்தி’’ என கூறி உள்ளார்.

* நிலைப்பாடு மாறாது
அமெரிக்க நீதிமன்றத்தின் நோட்டீஸ் குறித்து டெல்லியில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் முன்பே கூறியது போல், இவை முற்றிலும் தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இதுதொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எந்த விதத்திலும் எங்கள் நிலைப்பாட்டையும், கருத்துக்களையும் மாற்றாது. வழக்கு தொடர்ந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். அந்த நபர் சார்ந்த அமைப்பு சட்டவிரோதமான அமைப்பு. இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளது’’ என்றார்.

* அதிபர் பைடனுடன் மோடி விவாதிப்பார்?
அமெரிக்க பயணத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார். அப்போது காலிஸ்தான் விவகாரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ‘‘இரு நாடுகளின் நலன் சார்ந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்கள் பேசுவார்கள். இதில் எந்த ஒரு விவகாரத்தையும் குறிப்பிட்டு கூற முடியாது. இரு நாடுகள் இடையேயான அனைத்து விஷயங்கள் குறித்து நிச்சயம் பேசப்படும்’’ என்றார்.

The post காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல சதி இந்திய அரசுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்: ஒன்றிய அரசு கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : US COURT ,INDIAN GOVERNMENT ,EU ,Washington ,U.S. District Court ,EU government ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணக்கொள்ளை...