ஒன்றிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் 4% மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ஒன்றிய அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: ஒன்றிய பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களில் 4 சதவீத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர். இது, சமூக நீதி சூறையாடப்படுவதை காட்டுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு 1990ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு 34 ஆண்டுகள் ஆகியும் பேராசிரியர் பணிகளில் ஓபிசி வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 4% தாண்டாதது அதிர்ச்சியளிக்கிறது. பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணிகளுக்கு ஓபிசி வகுப்பில் தகுதியானவர்கள் இருந்தாலும் கூட, அவர்கள் கிரீமிலேயர்கள் என்று கூறி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அவர்களைத் தவிர மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இவ்வளவையும் செய்து விட்டு, ஓபிசி பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி, அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர்சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இப்படித்தான் சமூகநீதி சூறையாடப்படுகிறது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி சூறையாடப்படுவதை தவிர்க்க, முதல் நடவடிக்கையாக கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுக்க அவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும். அவற்றை பொதுப் பிரிவுக்கு மாற்றகூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு இதுவரை நிரப்பப்படாமல் இருக்கும் அனைத்து பணியிடங்களும், பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றை ஓபிசியினரை கொண்டு நிரப்ப நடவடிக்கை வேண்டும்.

The post ஒன்றிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் 4% மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ஒன்றிய அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: