பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

சென்னை: பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பப்புவா நியூ கினியா வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடி, ‘டோக் பிசின்’ மொழியில் திருக்குறள் வெளியிடுவதை பார்த்து அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் கலாசாரத்தின் மீதான ஆழமான பிணைப்பையும் மதிப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டு மக்களுடன் தொடர்பில் இருப்பது மட்டுமல்லாமல், தமிழ் சமூகத்தின் வளமான பாரம்பரியங்களையும், முக்கிய பங்களிப்புகளையும் அங்கீகரிப்பதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். காசி-தமிழ் சங்கமம் தமிழ் சமூகத்துக்கும் வாரணாசிக்கும் இடையிலான கலாசார பிணைப்பை வலுப்படுத்தியது. அப்பொழுது அவர் 13 மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார்.

இந்திய பிரதமர் மோடியின், மற்றொரு முயற்சி, சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் மூலம் தமிழ் கலாசாரத்தை கொண்டாடுவதாகும். அந்நிகழ்ச்சி ஒற்றுமையும் கலாசார பரிமாற்று உணர்வையும் வலுப்படுத்தியது. தமிழகத்தின் வரலாறு மற்றும் ஆற்றல் மிகு கலாசாரத்தை அடிக்கோடிட்டு அவர் பல உதாரணங்களை குறிப்பிட்டுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் பாரம்பரிய உடைகளை அணிந்து தமிழகத்துடன் அவரின் ஆழ்ந்த இணைப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் புத்தாண்டு போன்ற தமிழ் பண்டிகைகளில் கலந்து கொண்டு, தமிழ் மொழியை கற்கும் முயற்சியில் ஈடுபடுவது, தமிழ் கலாசாரத்தின் மீதான அவரது உண்மையான மரியாதைக்கு மற்றொரு சான்றாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: