×

கப்பல் கட்டுமானத்தில் உலகின் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வரும்: ஒன்றிய அமைச்சர் நம்பிக்கை

சென்னை: இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள குரூஸ் பாரத் மிஷன் செயலகம், ஆசியான் – இந்தியா குரூஸ் உரையாடல் 2025 நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் 4 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2029ம் ஆண்டுக்குள் கப்பல் பயணிகள் போக்குவரத்தை இரட்டிப்பாக்குவதையும், அதிகமான கப்பல் பயண வழித்தடங்களை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாகவும் உலகளவில் இரண்டாவது முறையாகவும் நடைபெறும் இந்த மாநாடு, கப்பல் பயணிகளின் போக்குவரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாவின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.
இதில் கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து தொடர்புடைய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடல் மூலம் இந்தியாவில் கப்பல் போக்குவரத்து மேம்படும்.

சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் முனையம் தற்போது 1,500 பயணிகளை கையாளும் வகையில் உள்ளது. 3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் இந்த முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று இங்குள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கையாள்வதற்கான நடைபாதை சேமிப்பு மையம் ரூ.36.91 கோடியில் 9.90 ஹெக்டேர் பரப்பளவில் மேம்படுத்தப்பட உள்ளது. சென்னை துறைமுகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஹைட்ராலிக் பவர் கட்டிடத்தை நினைவு சின்னமாக மாற்றி கடல்சார் வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியம் உருவாக்கிட அந்த கட்டிடம் ரூ.5.25 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இந்த புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள், இந்தியா கப்பல் கட்டுமானத்தில் உலகின் முதல் 10 இடங்களில் ஒன்றாக வரும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post கப்பல் கட்டுமானத்தில் உலகின் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வரும்: ஒன்றிய அமைச்சர் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Union Minister Nampisa ,Chennai ,Cruise Bharat Mission Secretariat ,Ministry of Ports, Shipping and Waterways ,Government of India ,Mamallapuram ,Union Ports ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...