×

உடும்பியம் அருகே கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு சேதமடைந்த பாலம்

*சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் உடும்பியம் அருகே கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு பாலம் சேதமடைந்துள்ளதால் விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலை பிரதான சாலைகளில் ஒன்றாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னை-கன்னியாகுமரி தொழில் தடத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் செஞ்சேரி முதல் துறையூர் புறவழிச்சாலை வரையிலான 30 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை தரமான சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலை மட்டும் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படாமலும், விரிவுப்படுத்தப்படாமலும் 5 கி.மீ. நீளத்திற்கு ஒரு இடத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில், பழுதடைந்த பாலங்களும், சேதமான சாலைகளும் சாட்சியாக காட்சியளிக்கின்றன.இதில் எசனை ஏரிக்கரை பகுதியில் திட்டமிட்டு சாலை அமைக்கப்படாததால், நாள்தோறும் ஏதேனும் ஒரு இரு சக்கர வாகனம் சறுக்கி விழும் அபாயத்தில் உள்ளது.

குறிப்பாக மாவட்ட எல்லையான உடும்பியம் கிராமத்திற்கு 100 மீட்டர் முன்பாக அமைந்துள்ள பாலம் ஒன்று சேதமடைந்து அதன் கான்கிரீட் கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே தெரிகிறது. இதில் 2 நாட்களுக்கு ஒருமுறை இரு சக்கர வாகன டயர்கள் பஞ்சராகி வெடிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

கார்களின் டயர்களும் இதற்கு விதி விலக்கல்ல. கார்களின் டயர்கள், கம்பிகள் குத்தியும், கான்கிரீட் திண்டுகள் மோதியும் சிறுது தூரம் சென்று பஞ்சராகும் சம்பவங்களும் வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே மாவட்ட எல்லை வரை முழு அக்கறை காட்டி, சேதமடைந்து பல உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் உடும்பியம் பாலத்தின் பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடும்பியம் அருகே கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு சேதமடைந்த பாலம் appeared first on Dinakaran.

Tags : Udumbiyam ,Perambalur ,Perambalur district ,Perambalur-Athur road ,Perambalur district… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...