×

லாரி ஓட்டும் தந்தை, கல் உடைக்கும் தாயின் கனவு நனவானது மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை பெற்ற நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவர்

நெல்லை : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நெல்லை லாரி டிரைவர், கல் உடைக்கும் தாயின் மகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பை பெற்று சாதித்துள்ளார்.
மருத்துவம் பல் மருத்துவம் உள்ளிட்ட கல்வி பயில நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறையை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி கேள்விக்குறியாக மாறி உள்ளது.

அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி பயில 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி ஊக்குவித்து வருகிறது. மேலும் மருத்துவக் கல்வி பயில விரும்பும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில் நீட் தேர்வில் நெல்லை அரசு பள்ளி மாணவர் 366 மதிப்பெண் எடுத்து தற்போது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயில இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து விவரம் வருமாறு: நெல்லை மாநகர் பேட்டை காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் கலைச்செல்வம். இவர் சமீபத்தில் நடந்த மருத்துவக் கல்வி தகுதிக்கான நீட் தேர்வை எழுதி 366 மதிப்பெண் பெற்றார். இவருக்கு அரசு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்தாய்வில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைத்துள்ளது. இதனால் இந்த மாணவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து கலைச்செல்வம் கூறுகையில், எனது தந்தை காளிமுத்து லாரி ஓட்டுனராக உள்ளார். தாய் கலா ராணி, கல் உடைக்கும் தொழில் செய்கிறார். எனது தம்பி கார்த்திக் செல்வம் சுத்தமல்லி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ஏழ்மையாக நாங்கள் உள்ள நிலையில் என்னை மருத்துவக் கல்வி பயில எனது தாய் தந்தை ஊக்குவித்தனர். எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களும் ஊக்கமளித்தனர். இதனால் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினேன்.

அப்போது 214 மதிப்பெண் கிடைத்தது. ஆனால் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. விடாமுயற்சியாக இந்த முறை நீட் தேர்வு எழுதி 366 மதிப்பெண் கிடைத்தது. ஒரு வருடமாக தொடர்ந்து வீட்டில் இருந்தும் பயிற்சி பெற்றேன். நெல்லை நீட் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கிருஷ்ணசாமி மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கினர். தனியார் கல்வி பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற பண வசதி இல்லாததால் யூடியூப் மூலமும் பயிற்சி பெற்றேன். பெற்றோர் ஆசிரியர்கள் ஊக்கத்தால் இந்த முறை கலந்தாய்வில் எனக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

எம்பிபிஎஸ் முடித்து தொடர்ந்து குடல் நோய் நிபுணராக சிறப்பு மருத்துவம் பயில விருப்பம் உள்ளது. என்னை ஊக்குவித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மாணவர் கலைச் செல்வத்தை நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசு அரசு நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி, பள்ளி தலைமை ஆசிரியை எவாஞ்சலின் பியூலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post லாரி ஓட்டும் தந்தை, கல் உடைக்கும் தாயின் கனவு நனவானது மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை பெற்ற நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவர் appeared first on Dinakaran.

Tags : Nelly Municipal School ,Paddy ,Thoothukudi Govt ,Paddy Municipal School ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா