மும்பை: ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது? என ரயில்வே அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புறநகர் ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் தொங்கியபடி சென்ற பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயங்களோடு உயிர் தப்பினர். இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் ஆராதே அமர்வில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என ரயில்வே அதிகாரிகளுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ரயில் விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ரயில்வேதுறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். நாளொன்றுக்கு10 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழப்பது, ரயில்வே துறை கவலைக்கிடமாக உள்ளது என்பதை உணர்த்துவதாக நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து, ரயில்வே துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விபத்து தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிபதியிடம் தெரிவித்தனர். அதற்கு, பூஜ்ஜிய உயிரிழப்பு என்ற நிலையை அடைய தானியங்கி கதவு அமைப்பை உருவாக்குவதே முக்கியம் என கூறினர். மேலும், “நாங்கள் ஒன்றும் ரயில்வே பொறியியல் வல்லுனர்கள் அல்ல ஆனால் தானியங்கி கதவை நிறுவ உத்தரவிட அதிகாரம் பெற்றவர்கள்” என தெரிவித்தனர். ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை நிறுவ பரிசீலிக்குமாறு ரயில்வே அதிகாரிகளை அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.
The post ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?: மும்பை ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

