×

சொந்த காங்கிரஸ் அரசை விமர்சித்த துணை முதல்வரின் வீட்டிற்கே சென்று சந்தித்த பாஜக தேசிய தலைவர்: இமாச்சல பிரதேச அரசியலில் பரபரப்பு

 

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை துணை முதல்வர் விமர்சித்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அவரை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மண்டி நகரில் நேற்று விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மேடையில் ஆவேசமாகப் பேசினார். அதிகாரிகளை எச்சரிக்கும் வகையிலும், சொந்தக் கட்சித் தலைமையிலான அரசையே மறைமுகமாக விமர்சிக்கும் தோணியிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது. குறிப்பாக, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு நிர்வாகம் தொடர்பாகக் கடும் செய்தி விடுக்கும் வகையில் அவர் பேசியது ஆளும் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில், சிம்லா வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற துணை முதல்வரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க முடியாததால், நல்லெண்ண அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆளும் கட்சிக்குள் மோதல் போக்கு நிலவும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வரைச் சந்தித்திருப்பது அம்மாநில அரசியலில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.

 

Tags : BJP ,Congress government ,Himachal Pradesh ,Shimla ,Congress ,J. B. ,Nata ,Mandi ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...