×

வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வாய்ப்பில்லை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

 

புதுடெல்லி: வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு மக்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நாட்டில் வங்கி மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக நிலவி வந்தது. தற்போதுள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் வரை சுமார் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான 2,246 வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதேபோல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ரூ.1.03 லட்சம் கோடி மதிப்பிலான 2,347 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில் அவர், ‘வங்கி மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தனியாகச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் உத்தேசம் தற்போது ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று தெளிவுபடுத்தினார். மேலும் அவர் கூறுகையில், ‘தற்போதுள்ள நீதித்துறை கட்டமைப்புகளே போதுமானதாக உள்ளன; ஏற்கனவே உயர்நீதிமன்றங்களின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டார். புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்குப் பதிலாகத் தற்போதைய நடைமுறையே தொடரும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman ,New Delhi ,central government ,
× RELATED இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக்...