நாளை முதல் கள ஆய்வு தொடக்கம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான எந்தவொரு பயனாளியும் விடுபட கூடாது: கண்காணிப்பு அலுவலர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக்கூடாது என கண்காணிப்பு அலுவலர்களுக்கு தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் நிலைபெறவுள்ள, ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் அமைந்திடும் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, 2023-24ம் ஆண்டு வரவு – செலவு அறிக்கையில் இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்தவகையில், “கலைஞர் மகளிர் உரிமை தொகை” வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்.15ம்தேதி தொடங்கப்பட உள்ளது. இதனடிப்படையில், சென்னை தலைமைச்செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில், மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவது குறித்து கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், துறைச்செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்கு கண்காணிப்பு அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா மேற்கொண்டார். இதில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகள், நடவடிக்கைகள் கண்காணித்து உறுதி செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் தகுதிகள் மற்றும் தகுதியின்மை, விண்ணப்பிக்கும் நடைமுறைகள், பொருளாதார தகுதிகள் அரசாணையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவதற்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, கால அட்டவணை, திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் செயலாக்கம், கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், முகாம்களை ஏற்பாடு செய்தல், முகாம் இடங்கள் தேர்வு, முகாம் நடைபெறும் நேரம் மற்றும் நாட்கள், உடனடியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்தல், முகாம்களில் அடிப்படை வசதிகள், விண்ணப்பதாரர் காத்திருக்கும் அறைகள், பயோமெட்ரிக் சாதனங்களை பெற்றுச் சரிபார்த்தல் பகிர்ந்தளித்தல், விண்ணப்பங்கள் பெறுதல் சரிபார்ப்பு மற்றும் பகிர்ந்தளித்தல், கூட்ட நெரிசல் தவிர்ப்பு ஏற்பாடுகள், காவல்துறை பாதுகாப்பு, நிழற்கூடங்கள், குடிநீர் வசதிகள், மின்சார வசதி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளக்கான வசதிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான வசதிகள், தீத்தடுப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல, நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமைத்திட்டதிற்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ள கண்காணிப்பு அலுவலர்கள் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது எனவும், திட்டப் பயனாளிகள் கண்டறியும் செயல்பாடுகள், பணி முன்னேற்றம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

The post நாளை முதல் கள ஆய்வு தொடக்கம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான எந்தவொரு பயனாளியும் விடுபட கூடாது: கண்காணிப்பு அலுவலர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: