இன்று சர்வதேச மாசுக்கட்டுப்பாட்டு தினம்: இந்தியாவில் ஆஸ்துமாவால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; ‘காரணம் காற்றுமாசு’; மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை; உலகளாவிய பாதிப்புகளில் 42 சதவீதம் இங்குதானாம்…

* சிறப்பு செய்தி
அனைத்தும் நவீனமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் காற்று மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. சுற்றுச்சூழலில் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அல்லது பிறகாரணிகள் காற்றில் கலப்பதே காற்று மாசு எனப்படுகிறது. வளி மண்டலத்தில் உருவாகும் வாயுக்களின் கலவையானது அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதில் ராசாயனங்களின் கலப்பு அதிகமாகும் போது பல்வேறு ஆபத்துகளை உருவாக்கும். இந்தவகையில் காற்று மாசுபாடு என்பது உலகளவில் ஆண்டு தோறும் 7 கோடி மக்களின் இறப்பிற்கு காரணமாகிறது. தொடரும் இந்த அவலத்தை தவிர்க்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டு தோறும் டிசம்பர் 2ம்தேதி (இன்று) ‘சர்வதேச மாசுக்கட்டுப்பாட்டு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்புகளும், மருத்துவ நிபுணர்களும் வெளியிட்டு வருகின்றனர். உலகளவில் கடந்தாண்டு மட்டும் காற்று மாசு காரணமாக 60.70 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதில் குழந்தைகள் மட்டும் 4.76 லட்சம் பேர். இந்தியாவில் காற்று மாசு காரணமாக பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 1.16 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, உலகளவில் ஆஸ்துமா பாதிப்புகளால் அதிக இறப்புகள் நிகழும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. மூச்சுத்திணறல், இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு காற்று மாசுபாடுகளே காரணம். இதில் இந்தியாவை பொறுத்தவரை காற்று மாசுபாடுகளால் ஆஸ்துமா இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார மேம்பாட்டு அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வுகளில், ‘‘உலகளாவிய ஆஸ்துமா இறப்புகளில் 42 சதவீதம் இந்தியாவில் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஸ்துமாவால் பாதிப்பவர்களுக்கு உள்ளிழுக்கப்படும் ‘கார்டிகோ ஸ்டீராய்டுகள்’ ஒரு நிலையான சிகிச்சையாக இருக்கிறது. ஆனால் 90 சதவீத நோயாளிகள் சரியான மருந்துகளை பெறுவதில்லை. இதன்காரணமாகவே இந்தியாவில் ஆஸ்துமா இறப்பு விகிதங்கள் அதிகரித்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்துமா சிகிச்சை நிபுணர்கள் கூறியதாவது: உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4.61 லட்சம் பேர் ஆஸ்துமாவால் இறப்பை தழுவுகின்றனர். இதில் இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை 1.98 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 3.43 கோடி பேர் ஆஸ்துமா நோயாளிகளாக உள்ளனர். இது உலகளாவிய பாதிப்புகளில் 12.9 சதவீதமாகும். ஆஸ்துமா பாதிப்புகள் மரபு சார்ந்து வருகிறது என்று ஒரு சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக காற்றில் பரவும் மாசு காரணமாக ஆஸ்துமா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

வாகனங்கள் வெளியேற்றும் புகை, கட்டிடங்கள் இடிப்பு, சுரங்கம் மற்றும் குவாரித்தொழில்கள், காய்ந்த பயிர் கழிவுகளை எரிப்பது, பாட்டாசு வெடிப்பது போன்ற காரணங்கள் காற்றை மாசு படுத்துகிறது. சாலையில் ஓடும் டீசல் வாகனங்களால் 20 சதவீத நைட்ரஜன் ஆக்சைடு காற்றில் கலக்கிறது. இந்த நைட்ரஜன் ஆக்சைடுதான், மனிதர்களின் மூச்சுக்கு முடிவுரை எழுதும் பி.எம்.25 என்ற துகள்கள் உருவாக முக்கிய காரணம். இந்த துகள்களை மனிதர்கள் சுவாசிக்கும் போது நுரையீரல் சார்ந்த பாதிப்புகள் அதிகமாகும். இதுவே ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் போன்றவை இதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் லேசானதாகவும் அல்லது கடுமையானதாகவும் இருக்கலாம். காலப்போக்கிலும் வந்து போகலாம். எனவே இது போன்ற அறிகுறிகள் இருப்போர் இது குறித்த மருத்துவர்களிடம் ஆலோசித்து உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதேநேரத்தில் நமது சுற்றுச்சூழலை பேணிக்காப்பதிலும் நமது பங்களிப்பு முக்கியமாக இருக்க வேண்டும். இதேபோல் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, வீட்டின் உட்புறத்திலும் காற்று மாசுக்கள் பரவாத நிலையில் சுகாதாரமாக இருக்க வேண்டியதும் முக்கியம். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

* உலகளவில் ஆஸ்துமா பாதிப்புகளால் அதிக இறப்புகள் நிகழும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
* இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 3.43 கோடி பேர் ஆஸ்துமா நோயாளிகளாக உள்ளனர்.
* இந்தியாவை பொறுத்தவரை காற்றில் பரவும் மாசு காரணமாக ஆஸ்துமா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

* தூசி, புகையே முக்கிய காரணம்
நீண்டகால ஒவ்வாமையின் காரணமாக சிலருக்கு மூச்சுக்குழாய், நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுவே ஆஸ்துமா என்று அழைக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இதை இளைப்பு நோய் என்றும் அழைக்கின்றனர். இது ஒரு தொற்று நோயல்ல. அதேபோல் காசநோய்க்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதேபோல் ஆஸ்துமா பாதிப்பு என்பது ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாது. மெத்தை, தலையணைகளில் பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும் போது ஏற்படும் ஒவ்வாமையும் இதற்கு காரணம். இப்படி பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆஸ்துமாவுக்கு மிகவும் முக்கிய காரணமாக இருப்பது தூசி, புகை, ரசாயனக்கலவைகள் வெளியேற்றம் போன்ற காற்று மாசுகள் தான். இதை உணர்ந்து நாம் சுகாதார நடவடிக்கைளை மேற்கொண்டால் ஆஸ்துமா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள தகவல்.

The post இன்று சர்வதேச மாசுக்கட்டுப்பாட்டு தினம்: இந்தியாவில் ஆஸ்துமாவால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; ‘காரணம் காற்றுமாசு’; மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை; உலகளாவிய பாதிப்புகளில் 42 சதவீதம் இங்குதானாம்… appeared first on Dinakaran.

Related Stories: