திருவாரூர் மாவட்டத்தில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டி அகற்ற வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாரூர் : தமிழகத்தில் கடந்த காலங்களில் அரசியல் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினர் விளம்பரங்களும் சுவர் விளம்பரமாக எழுதப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் வாழ்வாதாரம் பெற்று வந்தனர். இந்நிலையில் பின்னர் நவீன யுகத்தின் காரணமாகபிளக்ஸ் பேனர் என்ற வகையில் அரசியல் கட்சியினர் விளம்பரங்கள் மட்டுமின்றி திருமண வாழ்த்துக்கள், கோயில் கும்பாபிஷேகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி விளம்பரங்கள் என அனைத்தும் இந்த பிளக்ஸ் பேனர் மூலம் தயார் செய்யப்பட்டு சாலைகளின் பொது இடங்களில் வைக்கப்பட்டு வந்ததன் காரணமாக அந்த விளம்பரங்களை வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கவனித்து பார்க்கும்போது எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்துகளும் ஏற்பட்டன.

இது மட்டுமின்றி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னையில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி ஒருவர் பலியானார். இதனையடுத்து பேனர் கலாச்சாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதன்படி திமுக ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2021 ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் இருந்து வந்த பேனர்கள் அகற்றப்பட்டன.மேலும் முதல்வர் மு. க ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட கழகத்தினர் பேனர் வைக்க கூடாது என தலைமை கழகம் மூலம் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அரசு நிகழ்ச்சிகளில் கூட முதல்வர் கலந்து கொள்ளும்போது பேனர் வைப்பது தவிர்க்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் தனது ஆட்சி காலத்தில் ஏற்பட்ட உயிர்ப்பலிவினை கூட கவனத்தில் கொள்ளாமல் அதிமுகவினர் அவர்கள் இஷ்டத்திற்கு இந்த பிளக்ஸ்பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது ஒரு புறம் இருக்க மின் கம்பங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விளம்பர தட்டிகள் மற்றும் ரியல் எஸ்டேட் விளம்பர தட்டிகள் போன்றவை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக இந்த விளம்பரங்களை பொதுமக்கள்பார்த்துக்கொண்டு வாகனங்களில்செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருவது மட்டுமின்றி எதிர்பாராத விதமாக வீடுகளில் ஏற்படும் மின்துண்டிப்பினை சரி செய்வதற்காக மின்வாரியத்தின் ஒயர் மேன்கள் இந்த மின்கம்பங்களில் ஏறி மின் வயரை சரி செய்யும் போது இந்த விளம்பர தட்டி என்பது மின்கம்பத்தில் ஏறுவதற்கு மிகவும் தடையாக இருந்து வருகிறது. எனவே இந்த விளம்பர தட்டிகளை மின்கம்பத்தில் இருந்து அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும் மின்வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டி அகற்ற வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: