×

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி

* அங்கக வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைகள்

* விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 99 ஆயிரத்து 905 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துறையாடினார்,
கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் குறுவை பருவத்தில் 92 ஆயிரத்து 300 ஏக்கரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 500 ஏக்கரிலும், கோடை சாகுபடியாக 24 ஆயிரத்து 375 ஏக்கரிலும் என மொத்தம் 5 லட்சத்து 1 ஆயிரத்து 175 ஏக்கரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதில் கோடை பருவத்தில் 4 ஆயிரத்து 580 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 13 ஆயிரத்து 955 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 2 ஆயிரத்து 895 ஏக்கரில் சாதாரண நெல் நடவு முறையிலும் என மொத்தம் 21 ஆயிரத்து 355 ஏக்கரில் கோடை சாகுபடி பணிகள் நடைபெற்றன. மேலும் மாவட்டத்தில் 99 ஆயிரத்து 905 ஏக்கரில் குறுவை சாகுபடியானது செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டில் குறுவை பயிறுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 13 ஆயிரத்து 107 விவசாயிகள் தங்களது குறுவை பயிர்களை 50 ஆயிரத்து 529 ஏக்கரில் காப்பீடு செய்துள்ளனர்.

மேலும், சம்பா சாகுபடி என்பது மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் நன்னிலம் ஒன்றியங்களில் இதுவரையில் நீண்டகால ரகங்களான சி-ஆர்.1009 மற்றும் ஏ.டி.டி 51 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் நேரடி தெளிப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் 45 ஆயிரத்து 320 ஏக்கரில் சாகுபடியானது நடைபெற்றுள்ளது.

தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு விவசாயி அதிகபட்சமாக இத்திட்டத்தின் கீழ் 1 ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வாங்கிக் கொள்ளலாம்.

மாவட்டத்தில் 14 ஆயிரத்து 500 ஏக்கருக்கு 290 மெ.டன் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 50 சதவீத மானியத்தில் மண்புழு உரம் தயாரித்தல் மையம், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம், மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம், வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்ப மரங்கள் நடுதலை ஊக்குவித்தல், உயிர் பூச்சிக் கொல்லி பண்புடைய தாவரங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆடாதொடை, நொச்சி நடவுப் பொருட்கள் வழங்குதல், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வட்டார வாரியாக ஒவ்வொரு கிராமத்திலும் அங்கக வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைகள் உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.

இதில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், ஆர்.டி.ஒக்கள் சௌம்யா, கீர்த்தனாமணி, வேளாண் இணை இயக்குநர் ஏழுமலை, வேளாண் துணை இயக்குநர் லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபா நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,THIRUVARUR ,
× RELATED காத்து வாக்குல இரண்டு காதல்… கழுத்தை...