×

கடன் தொல்லையால் சோகம் 3 குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: 4 வயது சிறுவன் பரிதாப பலி

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்ல பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் குமாரவேலு (45). புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி உச்சிமாகாளி (40). பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு 7 வயதில் 2ம் வகுப்பு படிக்கும் பழனி சக்திகுமரன், அங்கன்வாடி மையம் செல்லும் 6 வயது இந்திரவேல், நான்கு வயதில் பிரவின்ராஜ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். குடும்ப செலவுக்காக உச்சிமகாளி சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியுள்ளார். இதை திரும்ப செலுத்த முடியாமல் ஐந்து தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று வார தொகையாக ரூ.2500 செலுத்த வேண்டியிருந்தது. இதற்காக அவர் அக்கம் பக்கத்தில் கடன் கேட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். நேற்று காலை 8 மணியளவில் அரளி விதையை அரைத்து தானும் குடித்து விட்டு, மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். அவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். தகவலின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவின்ராஜ் இறந்தான். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கடன் தொல்லையால் சோகம் 3 குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: 4 வயது சிறுவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kumaravelu ,Sella Pilliyarkulam ,Kadayam ,Prota Master ,Uchimakali ,Palani Shaktikumaran ,Anganwadi ,
× RELATED தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க தடை