திருப்போரூர் பேரூராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருப்பதால் இப்பகுதி வேகமாக வளர்ச்சிடைந்து வருகிறது. தனியார் வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சிறிய அளவிலான ஓட்டல்கள், டீ கடைகள் என ஓஎம்ஆர் சாலையில் தினம் ஒரு கடை திறப்பு விழா நடந்து கொண்டே இருக்கிறது.

இந்த கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்தும், வீடுகளில் இருந்தும் குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்கும் வகையில் காலவாக்கம் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட மையம் செயல்பட்டு வருகிறது. வீடுகளில் சேரும் குப்பைகளை சுகாதார பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று பெற்று விடுகின்றனர். ஆனால், கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களின் குப்பைகளை அவ்வாறு பெறுவதில்லை. இதன் காரணமாக அவை சாலையோரம் கொட்டப்படுகின்றன. சாலையில் துப்புரவு வாகனங்கள் செல்லும்போது அவை அகற்றப்படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் அகற்றப்படும் குப்பைகள் சில நேரம் அகற்றப்படாமல் விடப்படுவதால் காற்றில் பறந்து வாகனங்களில் செல்வோர் மீதுபடுகின்றன. மேலும் ஆடு, மாடு, பன்றி போன்ற கால்நடைகள் குப்பைகளை கிளறி உணவு கழிவுகளோடு சேர்த்து பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்கின்றன. இதனால் நோய் தாக்கி அவை இறப்பதோடு சாலையோரம் வீசப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் நிலையும் உள்ளது. எனவே, காலவாக்கம், கண்ணகப்பட்டு பகுதிகளில் உள்ள டீ கடைகள், ஓட்டல்கள் போன்றவற்றில் இருந்து சாலையோரம் வீசப்படும் குப்பைகளை தினசரி அகற்றவேண்டும். சாலையோரம் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருப்போரூர் பேரூராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Related Stories: