இந்த வார விசேஷங்கள்

17.9.2023 – ஞாயிறு
கல்கி ஜெயந்தி

யுகங்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. கிருத யுகத்திற்கு 17,28,600 ஆண்டுகள். திரேதாயுகத்திற்கு 92,96,000 ஆண்டுகள். துவாபர யுகத்திற்கு 8,64,000 ஆண்டுகள். கலியுகத்திற்கு 4,32,000 ஆண்டுகள் என வகுக்கப்பட்டுள்ளது.இவை நான்கும் சேர்ந்தது சதுர் யுகம்.

மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் ஒவ்வொரு யுகங்களிலும் இந்த அவதாரங்கள் உண்டு அதில் பத்தாவது அவதாரம் கல்கி அவதாரம். பல சதுர் யுகங்கள் உள்ளதால், ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றுவதற்காக கல்கி, பல முறை அவதாரம் எடுத்து உள்ளார். அந்த கல்கி ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. கல்கி ஜெயந்தி அன்று காலையில் எழுந்து புனித நீர் ஆட வேண்டும். திருமால் ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

நம்முடைய பாவ கர்மங்களை நீக்கி புண்ணியங்கள் தரும்படி பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். அதர்மம் மிஞ்சுகின்ற பொழுது தோன்றுகின்ற அவதாரம் என்பதினால் எக்காரணத்தை முன்னிட்டும் அதர்மம் செய்யாமல் இருக்க வேண்டும். அன்றைக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை முதலியவைகளை பாராயணம் செய்யலாம். ‘‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்கின்ற மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.

18.9.2023 – திங்கள்
புரட்டாசி மாதப் பிறப்பு விநாயகர் சதுர்த்தி

புண்ணியம் நிறைந்தது புரட்டாசி மாதம் என்பார்கள். மாதங்களில் நான் மார்கழி’ என்பது பகவான் கிருஷ்ணரின் திருவாக்கு. பகவான் மகா விஷ் ணுவை ஆராதிப்பதற்காகவே அமைந்த மற்றொரு மாதம் புரட்டாசி. இதைக் கன்யா மாதம் என்பார்கள். சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதை நாம் மாதப் பிறப்பு என்கிறோம். இந்த நாளில் மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர் வழிபாடு செய்யுங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.

புரட்டாசி மாதம் வந்ததும் பலரும் விரதம் மேற்கொள்ளத் தொடங்குவார்கள். இந்த மாதத்தில் அசைவம் முதலான உணவுகளைத் தவிர்ப்பவர்களும் உண்டு. சனிக்கிழமைகளில் உண்ணாநோன்பு இருந்து பெருமாள் தரிசனம் செய்வது பக்தர்களின் வழக்கம். அதோடு இன்று விநாயகர் சதுர்த்தி, விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டிய நாள்.

19.9.2023 – செவ்வாய்
ரிஷி பஞ்சமி

பஞ்சமி திதி மிக உயர்வானது.விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். பெண்களின் சௌவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும். அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும்.

அன்றையதினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும். மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும்.

மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சௌவுபாக்கியம் கிடைக்கும். இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இதில் நிவேதனமாக தேன்- பசும்பாலுடன் அனைத்து வகை கனிகளையும் படைப்பது சாலச்சிறந்தது. ரிஷி பஞ்சமி விரத பூஜையை சப்தரிஷி விரத பூஜை என்பார்கள். ரிஷி பஞ்சமி பூஜையில் ஆண்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து வழி படலாம். ஆனால் பூஜை நடத்தும் உரிமை பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

21.9.2023 – வியாழன் – சஷ்டி

இன்று புரட்டாசி குருவாரம்.சஷ்டி திதி என்பதால் முருகனுக்கு உரிய நாள். சஷ்டி திதியும், குரு வாரமும் இணைந்து வருவது இன்றைய சிறப்பு. ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்களும், இரண்டு திதிகளும் கலந்து, சுபயோகத்தோடு வருவது சிறப்பானது. சிலர், இந்த நாளை சம்பா சஷ்டி என்று அழைக்கிறார்கள். இன்று விரதமிருந்து கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் முதலியவற்றை பாராயணம் செய்ய வேண்டும் மாலை முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும்.

இன்று வான்மீக சித்தர் பூஜை தினம். 18 சித்தர்களின் வரலாற்றில் நான்காவது சித்தர் வான்மீகர். வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும். வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவர் சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார்.

போகர் 7000 எனும் நூலில் பாடல் 5834ல் வான்மீகர் எழுநூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாக இருக்கிறது. தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர். வான்மீக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோயிலில்
ஜீவ சமாதியடைந்தார்.

22.9.2023 – வெள்ளி
ராதாஷ்டமி – தூர்வாஷ்டமி

கிருஷ்ணனை நினைவுக்கூரும்போதே ராதையும் நினைவு கூரப்படுகிறாள். “ராதே கிருஷ்ணா” என்பதற்கு இணையான நாமம் வேறு இல்லை. அதனால்தான் பாகவதர்கள் குறிப்பாக வடக்கே, தங்களுக்குள் ‘ராதே கிருஷ்ணா’ என்று எப்போதும் சொல்லிக்கொள்கிறார்கள். ராதை, உத்தரப் பிரதேசம் மதுராவில் இருக்கும் பிரம்மஸரண் என்ற மலையின் அடி வாரத்தில் உள்ள பர்ஸானா என்னும் ஊரில் பிறந்தாள்.

இந்த ஊரில் ராதையை ‘ராதா ராணி’ என்றே போற்றுகிறார்கள். ராதா ராணிக்கு இங்கு ஓர் ஆலயமும் உள்ளது. இங்கு வாழும் மக்கள் அனைவரும் தங்களை ராதையாகவே பாவிக்கிறார்கள்.கிருஷ்ணனைப்போலவே ராதா பிறந்ததும் ஓர் அஷ்டமி தினத்திலேயே. எனவே ராதாவும் கிருஷ்ணரும் வேறு வேறல்ல என்றும் சொல்வார்கள். கிருஷ்ணரின் சக்தி ரூபமே ராதா என்பது நம்பிக்கை. ராதா அவதரித்த அஷ்டமியை ராதாஷ்டமி என்று அழைக்கிறார்கள்.

ராதாஷ்டமி நாளின் நண்பகலில் ராதே கிருஷ்ண வழிபாடு செய்து நாம சங்கீர்த்தனம் செய்யும் வழக்கம் உண்டு. ராதை அவதரித்த இந்த நன்னாளில் அஷ்டபதி பஜனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அஷ்டபதி தெரியாதவர்கள், ‘ராதே கிருஷ்ணா’ என்னும் நாமத்தை 108 முறை ஜபம் செய்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இன்று தூர்வாஷ்டமி எனப்படும் தினம் . அறுகம் புல்லை(தூர்) பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: