மதுரை: திருவாவடுதுறை ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை நியமனம் செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த சிவ இளங்கோ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், சைவ ஆதீனங்களில் திருவாவடுதுறை ஆதீனம் முதன்மையானது. இந்த ஆதீனத்திற்கு 75 கோயில்கள் இருக்கின்றன. பல மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், ஏராளமான சொத்துக்கள் இருக்கிறது.
இந்த ஆதீனத்தை 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் கவனித்து வருகின்றனர். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வாடகை, குத்தகையில் உள்ளது. பல ஆண்டுகளாக ஆதீன மடத்தின் அனுமதியோடு இங்கு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் சரியாக குத்தகை பணம் செலுத்துவதில்லை. எனவே வாடகை, குத்தகை வசூல்களை சீரமைக்கவும், சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் உத்தரவிட வேண்டும்.
மேலும் ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவானது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதீனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் ஊர்மக்கள் சிலர் மிரட்டுவதாக புகார் தெரிவித்தார். அப்போது, வாடகை, குத்தகை பணம் நேரடியாக மடத்திற்கு செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு ரசீது தருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளது என்றும் கூறினார். இந்த வழக்கில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகளை சீர்செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ் ராமநாதன், ஏ.செல்வம் ஆகியோரை ஆணையராக நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post திருவாவடுதுறை ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை நியமனம் செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.