புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்!

கடலூர்: புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இந்த மாதத்தில் பக்தர்கள் அசைவை உணவை தவிர்த்து பெருமாளுக்கு விரதம் இருப்பர். மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.பக்தர்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். அதன்படி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலையில் திருவந்திபுரம் தேவநாத சாமி கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் .இதற்காக கோயிலில் ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோயிலை சுற்றிலும் கட்டைகள் அடிக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஏற்கனவே கோயில் பின்புறம் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மொட்டை அடிக்கும் இடம் இருந்தது. தற்போது பக்தர்களின் வசதிக்காக அந்த இடம் கடலூர்- பண்ருட்டி சாலை அருகே மாற்றப்பட்டு அங்கு மொட்டையடித்து குளித்து நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக கோயிலில் இருந்து சில கிலோமீட்டர் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர்.

மேலும் கோயிலை சுற்றிலும் கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருந்தனர். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதே போல கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோயில், ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கடலூரை சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 

The post புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்! appeared first on Dinakaran.

Related Stories: