திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: தங்கும் விடுதிகளின் வாடகை கிடு கிடு உயர்வு.! பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. தினமும் காலை மற்றும் இரவில் சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் பவனி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் வரும் 26ம்தேதி மாலை ஏற்றப்படுகிறது. அன்று காலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பலர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். இந்த விடுதிகளில் சாதாரண நாட்களில் அறைகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப ரூ.1000 முதல் ரூ.3000 வரை வாடகை வசூலிக்கப்படும். இதற்காக பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து விடுகின்றனர். தற்போது தீபத்திருவிழா நெருங்கி விட்டதால் விடுதிகளில் அறைகள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தங்கும் அறைகளுக்கு கடும்போட்டி நிலவுவதால் வாடகையும் 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தங்கு விடுதிகள் இல்லை. சுற்றுலா துறை சார்பில் யாத்ரி நிவாஸ் விடுதி மட்டும் உள்ளது. இந்த விடுதியிலும், தீபத்திருவிழா ஏற்பாடுகளுக்காக அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் அதிகாரிகள் தங்குகின்றனர். தனியார் தங்கும் விடுதிகளும் குறைவான அளவே உள்ளதால் தீபத்திருவிழாவின்போது அறைகள் கிடைக்காமல் வெளியூர் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காக இந்துஅறநிலையத்துறை சார்பில் தங்கும் விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: தங்கும் விடுதிகளின் வாடகை கிடு கிடு உயர்வு.! பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: