திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான அரசு நகர்ப்புற பேருந்து தடம் எண் 48 நேற்று மதியம் மகன்காளிகாபுரம் கிராமத்திலிருந்து, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை வழியாக திருத்தணிக்கு வந்துக் கொண்டிருந்தது. இதில் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்த 35 சமையல் உதவியாளர்கள் உள்பட 55 பேர் பயணம் செய்தனர். இப்பேருந்தில் தற்காலிக ஓட்டுநராக பாலாபுரம் சேர்ந்த ஜெகநாதன் (43), நடத்துனராக ஆர்.கே.பேட்டை புதூரை சேர்ந்த சீனிவாசன் (40) ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது, அரசு பேருந்து ஆர்.கே.பேட்டை-திருத்தணி மாநில நெடுஞ்சாலை கே.ஜி.கண்டிகை பேருந்து நிலையத்திற்கு அருகில் மாலை 3 மணி அளவில் சென்றுக் கொண்டிருந்தபோது, திருத்தணியிலிருந்து பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள கல்குவாரிக்கு செல்ல மின்னல் வேகத்தில் வந்த டிப்பர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது அதிவேகமாக மோதியது. இவ்விபத்தில் பேருந்து முன் பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான அம்மையார்குப்பத்தை சேர்ந்த முரளி(35), மகேஷ்(38), பாண்டுரங்கன்(45), சிவானந்தம்(53) ஆகியோர் கூலி நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். இதில் முரளிக்கு பத்மாவதி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகேஷ் என்பவருக்கு மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பாண்டுரங்கன் என்பவருக்கு மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும், சிவலிங்கம் என்பவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
* ரூ.3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
டிப்பர் லாரி மோதி பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்கள் 4 பேர் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இக் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.
* nஉரிய நேரத்தில் வராத தீயணைப்புத் துறையினர்..
மதியம் 3 மணி அளவில் விபத்து நடைபெற்ற நிலையில், பேருந்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உரிய நேரத்தில் வராததால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சுமார் ஒருமணி நேரம் போராடி பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைத்தனர்.
* கல் குவாரிகளுக்கு செல்லும்
லாரிகளால் அடிக்கடி விபத்து
திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கல் மற்றும் கிராவல் மண் குவாரிகளுக்கு செல்லும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. கனகர வாகனங்கள் மற்றும் குவாரி லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்தவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
The post திருத்தணி அருகே கோரவிபத்து அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி நெசவுத் தொழிலாளர்கள் 4 பேர் உடல் நசுங்கி பலி: சிறுவர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்; போதை டிரைவர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.