சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் 1.43 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்தாண்டு ஆக.27ம் தேதியும், 2ம் கட்ட பேச்சுவார்த்தை பிப்.13ம் தேதியும் நடைபெற்றன.
இதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயரும்போது அந்த உயர்வை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக்காப்பீடு, ஊதிய ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்துவது, குறைந்தபட்ச ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து துறை தரப்பில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட 80 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் மே 29ம் தேதி காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தின் பயிற்சி மைய வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி மட்டும் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்களுடன் வரும் 29ம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை: சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.
