டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி: ஈரோட்டில் அடுத்தகட்ட போராட்டம் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் டெட் தேர்வுக்கு பிறகு வேலைவாய்ப்பை பெற நியமன தேர்வு எனப்படும் மற்றொரு போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக ஏற்கனவே போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சம வேலைக்கு சம ஊதியம், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், டெட் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு கடந்த செப்.28ம் தேதி முதல் சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நினைவு வளாகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் நியமன தேர்வுக்கான அரசாணையை பின்பற்றி போட்டி தேர்வு குறித்த அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டி தேர்வு வரும் ஜனவரி 7ம் தேதி நடைபெறும் என்றும், அதற்கான ஆன்லைன் பதிவு இன்று (நவ.1ம் தேதி) முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரத்தில் சுமுக முடிவை எட்டும் வகையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், இதனை ஏற்க தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக, இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், பணி நியமனம் விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட போட்டி தேர்வு தொடர்பான அறிவிப்புக்கு தடை ஆணை பெற உள்ளோம். எனவே, அமைச்சருடன் நடந்த எங்களது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக ஈரோட்டில் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றனர்.

The post டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி: ஈரோட்டில் அடுத்தகட்ட போராட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: