ஆயுதபூஜை வந்த கதையும் வழிபடும் முறையும்

நவராத்திரி வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும் இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம். இந்த இறுதி 3 நாட்களில் சரஸ்வதியை வழிபாடு செய்வதால் இந்நாள் சரஸ்வதி பூஜை ஆகும். கல்விக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை தினசரி வழிபாடு செய்தாலும் அவருக்கான சிறப்பான நாளாக இந்த சரஸ்வதி பூஜை செய்யப்படுகிறது. ஞானம், நினைவாற்றல் வலுப்பெறவும், படிப்பில் நல்ல நிலையை அடையவும் அனைவரும் வழிபாடு செய்யும் நாள். மேலும் கல்விக்கு இணையாக தொழிலும் முக்கியத்துவம் என்பதால் நாம் செய்யும் தொழிலையும் அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பு வைத்து வழிபடும் முறையும் இந்த நாளில் பின்பற்றுகிறோம். அதனால் இந்த தினம் ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜையின் முக்கியத்துவம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று பிறகு யார் கண்ணிலும் படாமல் வனவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஆயுதங்களை வன்னிமரத்தில் உள்ள பொந்தில் வைத்திருந்தனர்.

அஞ்ஞான வாசம் முடிந்த பிறகு ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வந்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தார்கள். மேலும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வழிபட்டதால் இந்நாள் ஆயுத பூஜை என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தவே இந்த பூஜை கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. வாழ்வில் நம்மை உயர்த்தும் ஆயுதங்களை போற்றும் வகையில் அதையும் இறைவனாக பாவித்து அவற்றால் யாருக்கும் எவ்வித தீங்கும் நேராமல் வைத்திருக்கும் வகையில் வழிபடுவதே ஆயுத பூஜை ஆகும். அன்றைய தினம் வீட்டில் இருக்கும் கரண்டி முதல் எலக்ட்ரானிக் சாதனம் வரை சுத்தமாக துடைக்க வேண்டும். வீட்டை அலங்கரிக்க வேண்டும். புத்தகங்களை அடுக்கி சந்தனம் தெளித்து வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் ஆயுதங்கள் கத்தி, அரிவாள் மனை போன்ற ஆயுதங்களையும் வைத்து வழிபட்டு அன்றைய தினம் அவற்றுக்கு ஒய்வு கொடுக்க வேண்டும். அடுத்த நாள் கற்பூர தீபாராதனை காட்டி அதை கலைத்து பயன்படுத்துவதும்தான் இந்த பூஜையின் சிறப்பம்சம் ஆகும்.

ஆயுத பூஜை வழிபாட்டில் வீட்டில் இருக்கும் இயந்திரங்களுக்கு விபூதி, சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரம் செய்ய வேண்டும். பூஜையறையில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவி படங்களை வைத்து அவர்களுக்கு முன்பு பூ, பழம் தேங்காய் பொரிகடலை, பழங்கள் வைத்து விளக்கேற்ற வேண்டும். குழந்தைகள் கல்வியறிவில் மேம்படவும் நினைவாற்றல் அதிகரிக்கவும் சிறந்த கல்வி அளிக்கவும் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். இல்லத்தரசிகள் வீட்டில் இருக்கும் இயந்திரங்கள் கத்தி உட்பட மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றால் எவ்வித விபத்தும் ஏற்படக்கூடாது. காயம் ஏற்படக்கூடாது என்று வேண்டுதல் வைக்க வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்களிலும் இயந்திரங்களால் எவ்வித ஆபத்தும் யாருக்கும் நேர்ந்திடாமல் இயந்திரங்களும் பழுது இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும். ஆயுத பூஜை மறக்காமல் பூஜை செய்யுங்கள். முப்பெரும் தேவியரின் அருள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கட்டும்.

The post ஆயுதபூஜை வந்த கதையும் வழிபடும் முறையும் appeared first on Dinakaran.

Related Stories: