தேனாம்பேட்டையில் ஆள்மாறாட்டம் மூலம் இங்கிலாந்து டாக்டருக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்து அபகரிப்பு: வாடகைக்கு இருந்த 2 பேர் கைது

சென்னை: இங்கிலாந்தில் வசித்து வரும் டாக்டருக்கு தேனாம்பேட்டையில் இருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இங்கிலாந்தில் வசித்து வரும் தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் மனு அலெக்சாண்டர்(50) புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் எனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறேன். எனக்கு தேனாம்பேட்டை அண்ணாசாலையில் ரூ.20 கோடி மதிப்புள்ள 3,149 சதுரடி நிலத்துடன் கட்டிடம் உள்ளது. நான் இங்கிலாந்தில் வசித்து வருவதால், எனக்கு தெரிந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த அப்துல் லதீப் இப்ராகீம் என்பவருக்கு சில ஆண்டுகள் லீசுக்கு விட்டு இருந்தேன்.

பிறகு லீசு முடிந்த உடன் அந்த இடத்தை நான் அவருகே வாடகைக்கு விட்டு இருந்தேன். ஆன்லைன் மூலம் எனது சொத்தின் வில்லங்கம் எடுத்து பார்த்தபோது, எனது சொத்தை நான் ஷேக் அப்துல் என்பவருக்கு விற்பனை செய்தது போலும், முன்பணம் ரூ.50 லட்சம் வாங்கியது போன்ற பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் எனது சொத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் பொன்சித்ரா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் , டாக்டர் மனு அலெக்சாண்டரின் வீட்டில் இருந்த அப்துல் லதீப் இப்ராகீம், ஆள்மாறாட்டம் செய்து ஷேக் அப்துல் காதர்(54) என்பவருக்கு விற்பனை செய்தது போல் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சூளைமேடு அமீர்ஜான் தெருவை சேர்ந்த பீர் முகமது(56) உடந்தையாக இருந்துள்ளார். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்சித்ரா தலைமையிலான் போலீசார் மோசடியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி கீத்பாத் தெருவை சேர்ந்த ஷேக் அப்துல் காதர்(54), சூளைமேடு அமீர்ஜான் தெருவை சேர்ந்த பீர் முகமது(56) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அப்துல் லதீப் இப்ராகிமை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post தேனாம்பேட்டையில் ஆள்மாறாட்டம் மூலம் இங்கிலாந்து டாக்டருக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்து அபகரிப்பு: வாடகைக்கு இருந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: