தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, (03.08.2023) நாளை காலை 9.45 மணியளவில் சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் ரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியினருக்கு 17.04.1756 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை உள்ளிட்ட பல பயிற்சிகளைப் கற்று சிறந்து வீரராக திகழ்ந்தார். கொங்கு நாட்டை மைசூர் மன்னர் ஆட்சி புரிந்ததால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் மன்னருக்குச் சென்றது. இத்தகவலை அறிந்த தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார். வரி கொண்டு சென்ற தண்டல்காரர்களிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று கூறியதால் அன்று முதல் ‘சின்னமலை’ என்ற பெயர் பெற்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

தீரன் சின்னமலை ஆன்மிக பணிகளில் சிறந்து விளங்கிய காரணத்தினால் திருக்கோவில்களுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டினார். மேலும் தமிழ் புலவர் பெருமக்களையும் ஆதரித்து வந்தார். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்திட தொடர்ந்து போரிட்டு 1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக் கரையிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்ற போர்களில் தீரன் சின்னமலை அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார். தீரன் சின்னமலை அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி 31.07.1805 அன்று சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் வீர தீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கும், சேலம் மாவட்டம் சங்ககிரிக் கோட்டையில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்திலும், அவர்களின் நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்திலும் அன்னார் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 03.08.2023 அன்று காலை 9.45 நடைபெறும் நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

The post தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: