பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் வரி செலுத்திய பஸ்கள் இன்று விடுவிக்கப்படும்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: கூடுதல் கட்டணம் உள்ளிட்ட விதிமுறை மீறலுக்காக பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளில் வரி செலுத்திய பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். இதனிடையே ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 119 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறை பிடித்தனர். மேலும் 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பேருந்துகளை பறிமுதல் செய்ததை கண்டித்து நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்தது. பின்னர் கே.கே நகரில் உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இணை போக்குவரத்து ஆணையர் முத்து தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட 119 ஆம்னி பேருந்துகளில் வரி கட்டிய பேருந்துகள் மட்டும் இன்று விடுவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியதாவது: சிறைபிடிக்கப்பட்ட 119 பேருந்துகளில் வரி கட்டிய பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பேருந்துகளை விடுவிக்க உத்தரவு பிறப்பித்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் வரி செலுத்திய பஸ்கள் இன்று விடுவிக்கப்படும்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: