இந்த வகையில் இந்தியாவுக்கு பாரத் என்ற பெயர் மாற்றமும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமும் லேட்டஸ்ட் சர்ச்சைகளாக உருவெடுத்து நிற்கிறது. டெல்லியில் தற்போது நடந்து வரும் ஜி20 மாநாட்டில், இந்திய குடியரசுத் தலைவர், பாரத் குடியரசு தலைவராக மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து பிரதமர் மோடியின் முன்பும், நாட்டின் பெயர் பாரத் என்றே இருந்தது. வெளிநாடுகளிலிருந்து வந்த அத்தனை தலைவர்களும் இந்தியா என்று குறிப்பிட்ட நேரத்தில், பிரதமரின் முன்பு பாரத் என்ற பெயர் எழுதி வைக்கப்பட்டிருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு புறமிருக்க, எதேச்சதிகாரத்தோடு இந்த அரசு காட்டும் அலட்சியமும், எளிய மக்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்குகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு ரேஷன் உணவு பொருட்கள் வழங்குவது மிகவும் முக்கியம் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 67 சதவீத மக்கள், ரேஷன் உணவு பொருட்களை பெறுவதற்கு தகுதியானவர்கள். இதன்படி நாட்டில் 95 கோடி பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 81 கோடி மக்களுக்கு தான் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், புதிய பயனாளர்கள் சேர்க்கப்படாமல், 2 ஆண்டுகளாக 14 கோடி பேருக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த திட்டத்தின் கீழ் புதிய பயனாளர்கள் சேர்க்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். இதனால் 2 ஆண்டுகளாக 14 கோடி பேருக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த, திறனற்று நிற்பதே இதற்கு முக்கிய காரணம். 2011ம் ஆண்டுக்கு பிறகு, கடந்த 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இருக்க வேண்டும்.
இந்தியாவில் 1951ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தவறாமல் நடந்து வந்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின்னும், இதை நடத்தாமல் இருப்பது வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய தோல்வி. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிகளின் சமூக, பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பையும் அரசு மறைத்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், பிற்பட்ட சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களின் நிலையை அறிய முடியாது. இதை அறியாமல், நாட்டில் வளர்ச்சி மற்றும் சமூக நீதியை ஏற்படுத்த இயலாது என்பது சமூக மேம்பாட்டு ஆர்வலர்களின் ஆதங்கம்.
The post எதேச்சதிகாரம் தந்த பாதிப்பு appeared first on Dinakaran.