நாளை மறுநாள் நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3: புகைப்படம் வெளியீடு

ஸ்ரீஹரிகோட்டா: நாளை மறுநாள் நிலவில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்க உள்ள நிலையில், அதற்கான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் வரும் 23ம் தேதி (நாளை மறுநாள்) நிலவில் தரையிறங்கும் என்றும், பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்திற்கு 40 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிலவில் தரையிறங்கிய பின்னர் நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 விண்கலம் நாளை மறுநாள் சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது. இந்நிலையில் நிலவில் சந்திரயான்-3 லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து விக்ரம் லேண்டர் அனுப்பியுள்ளது. இதன் மூலம் நிலவில் இருக்கும் பாறாங்கற்கள் அல்லது ஆழமான அகழிகள் இல்லாத இடத்தை கண்டறிந்து, அந்த இடத்தில் விண்கலம் தரையிறங்கும். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

The post நாளை மறுநாள் நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3: புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: