உருளைக்கிழங்கு சிப்ஸ் உருவான கதை!

உலக மக்களைக் கவர்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் எப்படி வந்தது தெரியுமா? அதற்கு நீங்கள் ஒரு எஸ்டிடியை (வரலாறு) தெரிந்துகொள்ள வேண்டும்

1853ம் ஆண்டில் ஒருநாள் நியூயார்க்கின் சரடோகா ஸ்பிரிங்கில் உள்ள மூன்ஸ் லேக் ஹவுஸ் என்ற உணவகத்தில், அமெரிக்க பணக்காரர்களில் ஒருவராக இருந்த கொர்னேலியஸ் வாண்டர்பில்ட் உணவருந்த வந்திருக்கிறார்.
அந்த உணவகத்தின் சமையல்காரரான ஜார்ஜ் க்ரம் ரொம்ப ஃபேமசானவர். அவரது கைவண்ணம் பலருக்கு ரொம்ப இஷ்டம். அப்படிப்பட்ட குக் சமைத்து, இணை உணவாக பரிமாறிய பொரியல் வகைகள் பணக்காரரான வாண்டர்பில்டுக்கு ஏனோ பிடிக்கவில்லை. அவற்றை திருப்பி அனுப்பியதோடு, பொரியல் மிகவும் தடிமனாக இருக்கிறது என புகார் கூறியிருக்கிறார். இதனால், விரக்தியடைந்த க்ரம், அருகில் இருந்த உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி ஒரு புதிய உணவைத் தயாரித்தார்.

அதை மெல்லிய காகிதம் போல் நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்து உப்பு தூவி கொடுத்தார். அவசரமாக செய்யப்பட்ட அந்த உணவு, வாண்டர்பில்ட்க்கு ரொம்பவே பிடித்துப்போனதாம். இப்படி பிறந்ததுதான் உருளைக்கிழங்கு சிப்ஸ். அதன் சுவை, ஊரெங்கும் பரவத் தொடங்க, 1860ல் ஜார்ஜ் க்ரம்ஸ், க்ரம்ஸ் ஹவுஸ் என்ற ஒரு லேக் வியூ உணவகத்தை தொடங்கி அதில் பிரதான உணவாக உருளைக்கிழங்கு சிப்ஸை பரிமாறினார். அது விரைவில் “சரடோகா சிப்ஸ்” என்று அழைக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் உருளைக்கிழங்கு சிப்ஸை ருசிக்க வரிசையில் நின்று வாங்கி சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் 1921ம் ஆண்டில், மளிகைக் கடைக்காரரான ஏர்ல் வைஸ், தனது கடையில் அதிகப்படியாக தேங்கிவிட்ட உருளைக்கிழங்குகளை என்ன செய்வது என்று யோசித்தபோது, சரடோகா சிப்ஸ் பற்றி அறிந்து, தன்னிடம் இருந்த உருளைக்கிழங்குகள் அனைத்தையும் மெல்லியதாக நறுக்கி பொரித்தெடுத்து, பழுப்பு காகித பைகளில் அடைத்து விற்பனை செய்ய தொடங்கினார். இப்படித்தான் வெகுஜன விற்பனைக்கு வந்து சேர்ந்தது உருளைக்கிழங்கு சிப்ஸ். பின்னர், உருளைக்கிழங்கு சிப்ஸ் புகழ் விரைவாக நாடு முழுவதும் பரவியது.1942ம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் அவற்றை அத்தியாவசிய உணவாக அறிவித்தது. இதன்தாக்கம், இரண்டாம் உலகப்போரின்போது அனைத்தும் முடக்கப்பட்ட நிலையிலும், உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டும் திறந்திருக்க அனுமதித்ததாம் அமெரிக்க அரசாங்கம். அந்த அளவுக்கு அமெரிக்கர்களின் முக்கிய உணவாக மாறியிருக்கிறது உருளைக்கிழங்கு சிப்ஸ்.

ஸ்ரீ

The post உருளைக்கிழங்கு சிப்ஸ் உருவான கதை! appeared first on Dinakaran.

Related Stories: