சேலம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நடப்பாண்டு ஓணம் பண்டிகை ரத்து செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து ஜவுளிகள் ஆர்டர் வரவில்லை. இதனால் தமிழக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, திருப்பூர், ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்பட பல பகுதிகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறிகளில் ஷாப்ட் சில்க், சுபமுகூர்த்த பட்டு, காட்டன் ஷாப்ட் சில்க், கரீஷ்மா, அபூர்வா, சாமுத்திரிகா பட்டு, கோட்டா காட்டன் பட்டு, மோனா காட்டன், மல்டி கலர் சேலை, எம்போஸ், பிக்கன் பிக் என்று பல்வேறு ரகங்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த சேலைகள் அனைத்தும் பாலியஸ்டர், கோல்டு ஜரிகை, சில்வர் ஜரிகை, காப்பர் ஜரிகை, புளோரா ஜரிகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அபூர்வா பட்டுச்சேலை, சில்க் காட்டன், காட்டன் சேலை, டவல், கேரளா சேலை, வேஷ்டி, லுங்கி, காடா உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரகங்களும் இந்தியாவில் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள பெண்கள் அணியும் சேலை, ஆண்கள் அணியும் வேஷ்டி, சர்ட்டுகள் கேரளாவுக்கு அனுப்பப்படும். நடப்பாண்டு அடுத்தமாதம் 15ம் தேதி ஓணம் பண்டிகை வருகிறது. இந்த பண்டிகை அங்குள்ள மக்களால் நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் அங்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 30ம் தேதி கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனால் நடப்பாண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்துள்ளதாகவும், அதேவேளையில் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் பண்டிகை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பையொட்டி அங்கு ஓணம் பண்டிகைக்கான வியாபாரம் முற்றிலும் ஸ்தம்பித்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சேலம் இளம்பிள்ளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சேலை, வேஷ்டி, சர்ட் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பப்படும். நடப்பாண்டு கேரளாவில் இருந்து வழக்கமாக வரும் ஆர்டர்கள் ஏதும் வராததால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்திலேயே அபூர்வா ஜரிகை சேலைக்கு சேலம் இளம்பிள்ளை தான் பெயர் பெற்ற இடமாகும். இளம்பிள்ளை சுற்றியுள்ள இடங்கணச்சாலை, வேம்படிதாளம், அரியானூர், சீரகாபாடி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், ஓமலூர், எட்டுக்குட்டைமேடு உள்பட பல பகுதிகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இளம்பிள்ளையில் ஆண்டு முழுவதும் ஜரிகைச்சேலை உற்பத்தி இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்கு இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சேலைகள், வேஷ்டி, சர்ட் விற்பனைக்கு அனுப்பப்படும்.
நடப்பாண்டு வயநாடு நிலச்சரிவு காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து வாக்கமாக ஆர்டர்கள் தரும் வியாபாரிகள் கூட, நடப்பாண்டு தரவில்லை. அங்கு கடைகளில் ஜவுளிகள் விற்பனை குறைந்துள்ளதாகவும், அப்படியே நாங்கள் ஜவுளிகள் விற்பனைக்கு வைத்தாலும் வியாபாரம் இல்லாமல் நஷ்டம் ஏற்படும் என்றும் அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஓணம் மூலம் கிடைக்கும் ஆர்டர்கள் இல்லாமல் போனதால் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கேரள ஆர்டர்கள் கைக்கொடுக்காமல் போனலும், ஆவணிமாத முகூர்த்தங்கள் ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது. இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.
ஆவணி முகூர்த்தம் விற்பனை அதிகரிப்பு
நடப்பு ஆவணி மாதத்தில் ஐந்து முகூர்த்தங்கள் வருகிறது. ஆவணி முகூர்த்தத்தால் விற்பனை நல்லமுறையில் நடந்து வருகிறது. கடந்த காலங்களில் வசதி படைத்தோர் முகூர்த்தங்களில் பெண்களுக்கு ₹20 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை முகூர்த்த பட்டுச்சேலை எடுக்கின்றனர். ஆனால் வசதி குறைவானவர்கள் இளம்பிள்ளை அபூர்வா ஜரிகை ரக சேலை வாங்கி முகூர்த்தங்களில் பயன்படுத்திக்கொள்கின்றனர். தற்போது அபூர்வா ரக சேலை வாங்குவோர் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அபூர்வா ரக சேலைகளின் விற்பனையும் கூடியுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post வயநாட்டில் நிலச்சரிவு எதிரொலி; ஓணம் பண்டிகைக்கான ஜவுளி ஆர்டர் வராததால் உற்பத்தியாளர்கள் கலக்கம்: பல கோடி வருவாய் இழப்பு என புலம்பல் appeared first on Dinakaran.