வாக்கு சீட்டை மட்டுமே காட்டுவதாக அதிமுக வேட்பாளர் எதிர்ப்பு; தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்..!!

தென்காசி: தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மறு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸை விட காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். எம்.எல்.ஏ. பழனி நாடார் பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மனுதாக்கல் செய்திருந்தார். தபால் வாக்கு எண்ணியதில் குளறுபடி என அதிமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 2,589 தபால் வாக்குகள் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண்ணப்படுகின்றன. தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்படுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர் அல்லது அவர் சார்ந்த நபர் ஒருவர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படிவம் 13, 13 பி ஆகியவற்றை பரிசீலித்து சரிபார்த்த பிறகே படிவம் 13 சி எனப்படும் ஒட்டு சீட்டுகளை எண்ண வேண்டும் என அதிமுகவினர் வாக்குவாதம் செய்துள்ளனர். தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13 சி விண்ணப்பத்தை சரிபார்க்க அதிகாரிகள் தரப்பு மறுத்துள்ளனர். வாக்கு சீட்டை மட்டுமே காட்டுவதாக அதிமுக வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

 

The post வாக்கு சீட்டை மட்டுமே காட்டுவதாக அதிமுக வேட்பாளர் எதிர்ப்பு; தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: