தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கு டெண்டர்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின் கணக்கீடு மற்றும் தணிக்கைக்காக மின்னூட்டிகள் மற்றும் மின்மாற்றிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளுக்கு அடுத்த வாரத்தில் டெண்டர் விடுப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மூலம் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் முறையை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மின்வாரியம் எடுத்து வருகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மின்னூட்டிகள் மற்றும் மின்மாற்றிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு தொலைத்தொடர்பு வசதிகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டது.

இதற்கான அனைத்து அளவீட்டு வேலைகளும் டோடெக்ஸ் முறையில் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் ஒன்றிய அரசின் மறுசீரமைக்கப்பட்ட விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு முன்னோடியாக சென்னை தியாகராய நகரில் ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய சிறப்பு அலுவல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசு 13 மாநிலங்களுக்கு ரூ.3,03,758 கோடி ஒதுக்கியுள்ளது, தமிழ்நாட்டிற்கு ரூ.10,759 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 70 சதவீதம் நிதி விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மின் இழப்பு குறைப்பு மற்றும் மின்கட்டமைப்பை நவீனமயமாக்கல் பணிகளும் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கு டெண்டர்: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: